சீனாவுடன் ஒப்பந்தம் போட்ட மறுநொடி.. “இந்தியர்கள் இருக்கக்கூடாது!” மாலத்தீவு அதிபர் மீண்டும் சர்ச்சை

மாலே: சீனாவுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட மறுநொடியே மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிராக சில பரபர கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது. அப்போதைய அதிபர் இந்தியாவுடன் நெருக்கம் காட்டிய நிலையில், இந்தியா பல முதலீடுகளையும் உதவிகளையும் மாலத்தீவுக்குச் செய்தது. ஆனால் கடந்தாண்டு இறுதியில் கடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்ஸு வென்றார். சீனா ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவர், தேர்தல் பிரசாரத்தின் போதே மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை அகற்றுவோம் எனக் கூறியிருந்தார்.

சர்ச்சை: இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து ஒரு வழியாகப் பஞ்சாயத்து எல்லாம் முடிந்தது என நினைத்த போது, இப்போது திடீரென மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு மீண்டும் இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைக் கூறியுள்ளார். வரும் மே 10ஆம் தேதிக்குப் பின் இந்திய ராணுவ வீரர்கள், சிவில் உடையில் கூட தங்கள் நாட்டிற்குள் இருக்கமாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு பேசியுள்ளார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினர் வரும் 10ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என மாலத்தீவு தெரிவித்துள்ளது. தீவு நாடான மாலத்தீவில் மருத்துவ காரணங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டரை ஆப்ரேட் செய்ய இந்திய ராணுவம் அங்கே இருந்தது. அந்த ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற முய்ஸு கேட்டுக்கொண்டார்.

வாய்ப்பே இல்லை: இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அங்குள்ள ராணுவத்தினரை வாபஸ் பெற்றுவிட்டு, அதற்கு பதிலாகத் தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி இந்தியா முடிவு செய்து இருந்தது. அதன்படி ஹெலிகாப்டர்களை ஆப்ரேட் செய்ய இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவு சென்றிருந்தனர். இந்தச் சூழலில் தான் திடீரென முய்ஸு இந்த பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்திய ராணுவத்தை எனது அரசு வெற்றிகரமாக வெளியேற்றிவிட்டது. இதனால் எனது அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகச் சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

அனுமதிக்க முடியாது: மேலும், இந்திய ராணுவம் இப்போது என்ன செய்ய முயல்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் இப்போது சீருடைகளை சிவிலியன் உடையாக மாற்றிவிட்டுத் திரும்புகிறார்கள்.. இதை ஒருபோதம் ஏற்றுக் கொள்ள முடியாது. மே 10 ஆம் தேதிக்குப் பிறகு நாட்டில் எந்தவொரு இந்தியப் படைகளும் இருக்காது. அவர்கள் ராணுவ சீருடை அணிந்திருந்தாலும் சரி சிவில் உடையில் இருந்தாலும் சரி.. அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

சீனாவுக்கு ஓகே: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு நேற்று தான் சீனாவுடன் பாதுகாப்பு சார்ந்து மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்றியைக் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் சீனா வீரர்கள் மாலத்தீவுக்குள் வருவதை அனுமதிப்பதாக இருக்கிறது. இந்திய வீரர்களை வெளியேற்றிவிட்டு நிச்சயம் சீனா உள்ளிட்ட எந்தவொரு வீரர்களையும் அனுமதிக்க மாட்டோம் என அதிபர் முய்ஸு கூறியிருந்த நிலையில், இப்போது அதற்கு நேர் எதிராக அவரே சீனா ராணுவத்தை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here