ஜார்ஜ் டவுன்:
நோன்பு மாதத்தில் முஸ்லிம் உணவகங்களின் இயக்க நேரத்தை பினாங்கு மாநில அரசாங்கம் கட்டுப்படுத்தாது. இருப்பினும், நோன்பு நோற்காத முஸ்லிம்கள் வெளிப்படையாக உணவு உட்கொள்ள வேண்டாம் என்று மாநில துணை முதலமைச்சர் I, டத்தோ டாக்டர் முகமட் அப்துல் ஹமீட் கூறினார்.
“நோன்பு மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கர்பிணிப்பெண்கள் என ‘உசுர் சயாரி’ வகையின் கீழ் வரும் முஸ்லிம்கள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவர்கள் உணவை உட்கொள்ளலாம், ஆனால் அது வெளிப்படையாக செய்யப்படக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.
ஆனால் நோன்பு மாதத்தை மதிக்குமாறு அவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று, கம்போங் ராவாவில் நடந்த ரமலான் மாத ஒருங்கிணைப்பு செயல் திட்டத்தை தொடக்கிய பின்னர், அங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, புனித ரமலான் மாதத்திற்கான பிறை நாளை பார்க்கப்படும் என அரசு முத்திரைக் காப்பாளர் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




















