அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே 17ஆம் தேதிக்குள் உடன்பாடு : 4 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1ஆம் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.

இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு நேரில் சென்று பேசினார்கள். 2ஆம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.

ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார். இதனால் குழப்பம் நிலவியது. இருப்பினும் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடை பெற்று வந்துள்ளது. 7 எம்.பி. தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தே.மு.தி.க. கேட்டுள்ளது.

இதில் 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருகிற 17ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி 3-வது கட்டமாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதன் பின்னர் 2 கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்து போட உள்ளனர். பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here