சிட்னி:
இந்த வாரயிறுதியில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை ஆஸ்திரேலியா கடுமையாக்கவிருக்கிறது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், அங்கு குடியேறிகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டதாக அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுவதால், அந்நாட்டு அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வரும் சனிக்கிழமை (மார்ச் 23) முதல், மாணவர் விசா, பட்டதாரி விசா ஆகிய பிரிவுகளுக்கான ஆங்கிலமொழித் திறன் தேவை அதிகரிக்கப்படும்.
கல்வி நிலையங்கள் மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபட்டால் அனைத்துலக மாணவர்களைச் சேர்ப்பதற்கான அவற்றின் உரிமத்தை அரசாங்கம் ரத்து செய்ய இயலும்.
நாட்டின் குடியேற்ற நடைமுறையைச் சீராக்க அரசாங்கத்தின் கடப்பாட்டைக் காட்டும் இந்த நடவடிக்கைகள் தொடருமென்று உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் வேலைபார்க்கும் விருப்பத்தில் விசாவிற்கு விண்ணப்பிக்கும் அனைத்துலக மாணவர் சேர்க்கையை ஒடுக்கும் விதமாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும், வருகையாளர் விசாக்களுக்கு ‘குறிப்பிட்ட காலத்துக்குமேல் தங்க இயலாது’ எனும் நிபந்தனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப்பின் வர்த்தகங்கள் எதிர்கொண்ட ஊழியர் பற்றாக்குறைக்கு உதவும் நோக்கில், 2022ல் ஆஸ்திரேலியா வருடாந்தரக் குடியேற்ற எண்ணிக்கையை அதிகரித்தது. ஆனால் திடீரென்று மாணவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் வாடகை வீட்டுச் சந்தை பாதிக்கப்படவே அரசாங்கம் விசா நடைமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.