பி.ஆர். ராஜன்
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கு (மித்ரா) புதிய புளுபிரிண்ட் (பெருந்திட்டம்) தயாரிப்பதற்கு இரண்டு நாள் பட்டறை, ஆய்வகம் நடத்தப்பட்டது. புத்ராஜெயா, பிரசின்ட்-1, புசாட் பெந்தட்பிரான் கெராஜாஹான் பெர்செகெத்துவான் எனும் மத்திய அரசாங்கத்தின் கட்டடத்திலுள்ள டேவான் டாமார் சாரி -1, 2 ஆகிய மண்டபங்களில் 2024 மார்ச் 20 தொடங்கி 21 வரை புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இந்தப் பட்டறை நடத்தப்பட்டது.
வியாழக்கிழமை இந்தப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்திற்கு 2 மாடிகளுக்கு மேல் மற்றொரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மலாய்க்காரர்களின் நலன்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கூட்டம் என்று நம்பப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டிருக்கிறார். இது ஓர் அருமையான சந்தர்ப்பம் பிரதமரை மித்ரா பட்டறைக்கு அழைத்து வந்தால் தமக்கு பெரும் பெயர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஒரு துணை அமைச்சர் அன்வாரை சந்தித்திருக்கிறார்.
சாதாரணமாக தொடங்கிய உரையாடல் கீழ் மாடியில்தான் மித்ரா பட்டறை நடந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து நீங்கள் அங்கு வந்து சிறிது நேரம் தலையைக் காட்டினால் நன்றாக இருக்கும் என்று அந்த துணை அமைச்சர் கூறியிருக்கின்றார். துணை அமைச்சரின் இந்தக் கோரிக்கையை அன்வார் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்று அரசல்புரசலாகக் கிடைத்த தகவல் தெரிவித்தது. சாதாரணமாக பேசத் தொடங்கிய அந்த துணை அமைச்சர் பிரதமரின் இந்தப் போக்கால் சற்று நிலைகுலைந்து போய் மன்றாடத் தொடங்கியிருக்கிறார்.
தயவு செய்து வந்து தலையை மட்டும் காட்டி விட்டுப் போய்விடுங்கள் என்று அவர் கெஞ்சியிருக்கிறார். ஆனால், எதற்குமே செவிசாய்க்காத பிரதமர் தான் வந்த வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார். துணை அமைச்சரின் முயற்சிகள் எதுவும் பிரதமரிடம் எடுபடவில்லை. டத்தோஸ்ரீ அன்வார் இந்திய சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கும் தானாக முன்வந்து கலந்துகொள்வதில்லை. பத்துமலைத் தைப்பூசத்திற்கு அவரின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணம் இருக்கிறது என்று சொல்லி அதையும் அவர் தட்டிக் கழித்தார்.
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டார். எந்தவொரு தலைவருக்காக இந்திய சமுதாயம் அடித்துப்பிடித்து ஆதரவு தேடியதோ அந்த சமுதாயத்தை அவர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புறந்தள்ளியிருக்கிறார். டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது, இந்தியர்கள்- இந்துக்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பெருவிழாக்களிலும் கலந்து கொண்டு இந்திய சமுதாயத்தை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்.
தைப்பூசம், பொங்கல், தீபாவளி போன்ற அனைத்துப் பெருநாட்களிலும் இந்தியர்களின் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் அவர் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நாட்கள் அர்த்தம் பொதிந்தவை. சமுதாயத்திற்கு மிகப் பெரிய மரியாதையைத் தந்தவை. ஆனால், டத்தோஸ்ரீ அன்வார் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார். தன்னுடைய அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு துணை அமைச்சர் அழைத்தும் அதனை அவர் நிராகரித்திருக்கிறார் என்றே நம்பத் தோன்றுகிறது.



















