கோலாலம்பூர்:
விசாரணைக்காக கோலகுபு பாரு மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட, உலு சிலாங்கூர் ஸ்ரீ தெரத்தாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயச் செயலாளர் பாஸ்கரன் நேற்று மாலை 5.00 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.
இன்று வரை இவரை தடுத்து வைக்க நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றிருந்தாலும், முழு விசாரணைக்கு பிறகு இவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலு சிலாங்கூர் ஸ்ரீ தெரத்தாய் ஆலயத்தின் எதிரில் வங்காளதேச ஆடவர் சட்ட விரோதமாக கடை கட்டியதை எதிர்த்து குரல் கொடுத்தபோது ஏற்பட்ட சலசலப்பில் ஆலயச் செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார் என்று உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேவரன் பச்சைமுத்து தெரிவித்தார்.
வங்காள தேச ஆடவரின் மனைவி ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து India babi என்று இந்தியர்களை திட்டியதால் அங்கு பெரும் சலசலப்பு உருவானது.
இந்த விவகாரம் தொடர்பில் ஆலய செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

வங்காள தேச ஆடவரும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே நேற்று மாலையில் விடுவிக்கப்பட்ட பாஸ்கரன் அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
தம்மை விடுவிக்க கடும் முயற்சியை மேற்கொண்ட உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேவரன் பச்சைமுத்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி பாராட்டினார்.





















