உலக அழகிப் போட்டியில் குதிக்கும் சவுதி அரேபியா

லக அழகிப்போட்டி வரலாற்றில் முதல்முறையாக பங்கேற்கிறது சவுதி அரேபியா.

அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இன்றைய தினம் சவுதி அரேபிய மக்கள் இந்த தகவலை தங்களுக்குள் பகிந்து வருகின்றனர்.

சவுதி அரேபியா மற்றும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் முதல் முறையாக சவுதி அரேபியா பங்கேற்கிறது.

ரூமி அல்கஹ்தானி என்ற 27 வயதான மாடல் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் இன்றைய தினம் இதனை அறிவித்தார். இதனை சவுதி அரேபியாவும் உறுதி செய்துள்ளது. ஒரு பழமைவாத நாடு என்ற பிம்பத்தைக் குறைக்க பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவூதின் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.

“மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த போட்டியில் சவுதி அரேபியாவின் அறிமுகம் இதுவாகும்” என்று ரூமி அல்கஹ்தானியின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தை சேர்ந்த அல்கஹ்தானி, பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டதில் பிரபலமானவர். ஆனால் முதல்முறையாக சவுதி அரேபியாவை மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு இழுத்துச் செல்கிறார்.

அரேபிய தீபகற்பத்தில் மிகப்பெரிய தேசமான சவுதி அரேபியா, பாரம்பரியமாக கடுமையான மத மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை பராமரித்து வருகிறது. இறுக்கமான சட்டங்கள், கட்டுப்பாடுகள் நிறைந்தபோதும், காலமாற்றங்களுக்கு ஏற்ப அவசியமான தளர்வுகளையும் கண்டு வருகிறது. பழமைவாதத்திற்கு பெயர் பெற்றிருந்த தேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக, ஆண் பாதுகாவலர் இன்றி பெண்கள் வாகனம் ஓட்டவும், இருபாலினத்தோர் பங்கேற்கும் கலந்து கொள்வது, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றில் மாற்றங்களை கண்டு வருகிறது.

2030 ஆம் ஆண்டிற்குள் 150 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டிருப்பதை இலக்காகக் கொண்டுள்ளது சவுதி அரேபியா.

பொருளாதாரத்திற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக எண்ணெய் மற்றும் அது தொடர்புடைய வணிகத்திலிருந்து விலகிச் செல்லவும் தொடங்கியுள்ளது. விஷன் 2030 திட்டத்தின் கீழ் ஏற்கனவே மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து ஒரு மெகா பொழுதுபோக்கு நகரமான கிடியாவையும் கட்டமைத்து வருகிறது.

இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, ஆண்களுக்கான ஃபிஃபா 2034 உலகக் கோப்பைக்கு அதிகாரப்பூர்வமாக ஏலம் எடுத்துள்ளது. தவிரவும் உலகின் மிகப்பெரிய கால்பந்து அணிகள் சிலவற்றையும் கைப்பற்றி வருகிறது. உலகளாவிய இலக்காக தனது பிம்பத்தை மீள்கட்டமைப்பதில், கால்பந்து மெகா தொடக்கங்கள் உதவும் என நம்புகிறது.

மேலும், நாட்டில் உள்ள முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்கு மது விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக கறுப்புச் சந்தையில் மட்டுமே மது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here