பாகோர்:
இந்தோனேசியாவின் பாகோரில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்கில் நேற்றிரவு (மார்ச் 30) தீப்பரவல் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணியளவில் அந்தப் பெருந்தீயைத் தொடர்ந்து, வெடிப்புகள் ஏற்பட்டதுடன் தீப்பிழம்பும் புகையும் விண்ணை நிறைத்ததாகக் கூறப்பட்டது.
இருப்பினும் இன்று அதிகாலை தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
காலாவதியான வெடிபொருள்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ மூண்டதாகவும், இந்தச் சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
மிகப் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்தப் பகுதிவாசிகள் ஊடகங்களிடம் கூறினர். சிலர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அஞ்சி வீதிகளுக்கு ஓடிவந்ததாகக் கூறப்பட்டது.
வெடிப்பைத் தொடர்ந்து, சிதறிப் பறந்த சில பொருள்கள் ஆயுதக் கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படக்கூடும் என்று கூறிய அதிகாரிகள் அவற்றைத் தொடவேண்டாமெனப் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
அவை எத்தகைய பொருள்கள் என்பது குறித்து அதிகாரிகள் கூறவில்லை. இருப்பினும் ஆபத்தான பொருள்களாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.
ராணுவம் அந்தப் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
























