தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தனித்திறன் அரசு சாரா இயக்கங்களின் பங்கு

 

முனைவர் முரசு நெடுமாறன்

இன்று தமிழ்ப்பள்ளிகளின் உயர்விற்கும் மாணவர்களின் மேம்பாட்டிற்கும் குரல்கொடுக்கும் அரசு சாரா நிறுவனங்கள் பல; பலப்பல செயல்படுகின்றன. அறிக்கைகள் வழியும் ஆங்காங்கு நடக்கும் கூட்டங்கள் மூலமும் நம்மால் இவற்றை உணர முடிகிறது. தாய்மொழியான தமிழைப்போற்றும் உணர்வும் அடுத்த தலைமுறை தமிழ்ப்பற்றற்றதாக ஆகிவிடக்கூடாது – சொந்த அடையாளத்தை மறந்துவிடக் கூடாது என்பதில் நாட்டமும் கொண்டுள்ள நல்லுள்ளங்கள் நம் பாராட்டிற்குரியன.

நான் டாக்டர் சண்முக சிவாவின் மருத்துவக் கேள்வி பதில்களை நெடுங்காலமாகப் படித்து வருபவன்; அவை குறித்து அவருடன் கருத்துப் பரிமாற்றம் செய்தும் வருபவன். அவர் பல்துறைகள் கற்றுத் தேர்ந்த விற்பன்னர் மாந்தநேயமும் தொண்டு மனமும் கொண்டவர். ஆதலால், அவர் மறுமொழிகளில் உடல்நல நோக்கு மட்டுமல்லாமல் மனத்தெளிவிற்கும் மருந்திருக்கும். மனத்தெளிவு பெற்றுவிட்டால் உடல்நோய் எளிதில் தீர்ந்து விடுமன்றோ? அதனால்தான், ‘நோய்நாடி நோய்முதல் நாடச்’ சொன்னார் திருவள்ளுவர் (குறள் எண்: 948)

17.3.2024ஆம் நாள் மக்கள் ஓசை ஞாயிற்றுப் பதிப்பில் சமுதாயம் சார்ந்து – தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நலம் சார்ந்து டாக்டர் சிவா  அளித்திருந்த மறுமொழியின் தாக்கத்தால் எழுதப்பட்டது இச் சிறுகட்டுரை.

முதலில் ஓர் அம்மையார் எழுப்பிய வினாவையும் அதற்கு டாக்டர் அளித்த மறுமொழியையும் பார்ப்போம்: கேள்வி: என் மகள் தமிழ்ப்பள்ளியில் 6ஆம் வகுப்புப் படித்து முடித்துவிட்டு மலாய்ப் பள்ளிக்குச் செல்லவிருக்கின்றாள். மிகவும் பதற்றத்துடன் இருக்கிறாள். அங்கே மற்ற இன ஆசிரியர்கள் இருப்பதால் பயப்படுகின்றாள். ஆலோசனை கூறுங்கள்.

பதில்: நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்திலும் தேசிய மொழியிலும் பேசும்திறன் இருந்தாலே போதும் எங்கேயும் சமாளித்து விடுவார்கள். அவர்களுக்கு இந்த மொழிஆற்றலையும் தன்னம்பிக்கையையும் தருவதற்காக இலவசமாகவே 21 நாள்கள் EMPOWERMENT CAMP என்று MYSKILLS அறவாரியத்தில் சென்ற வாரங்களில் சிறப்பாக நடத்தினோம். அங்கே தங்கி ஆங்கிலம், மலாய் மொழிகளில் உரையாடி, உறவாடிப் பழக அது சிறந்த வாய்ப்பாக இருந்தது. இலவசமாக உணவு, உறைவிடம் தந்து நடத்தி வருகின்றோம். பெற்றோர், ஆசிரியர்கள் முன்வந்தால் இதனைத் தொடர்ந்து நடத்தலாம்.

இப்படி மறுமொழிகூறும் டாக்டர் சண்முக சிவா, இந் நாட்டில் இந்தியர்கள் நூற்றுக்கணக்கான அரசு சாரா இயக்கங்கள்  வைத்திருக்கிறார்கள். இம்மாதிரியான் முயற்சிகளை எடுத்து நடத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? ஆங்காங்கே நாடு முழுதும் இம்மாதிரியான பயிலரங்குகள், முயற்சிகள் நடக்க வேண்டும்.  மைஸ்கில்ஸ் அறவாரியம் இதனை ஏற்று நடத்தக் காத்திருக்கின்றது.

அவரின் இந்தப் பரிந்துரையும் உறுதிமொழியும் நல்ல விளைவுகளை ஏற்படுத்த வழி வகுப்பதாகும். இதனைச் செயல்படுத்துதல் எங்ஙனம்? இப்போது தமிழ்ப்பள்ளிகள் என்றும் சீனப்பள்ளிகள் என்றும் தேசியப்பள்ளிகள் என்று செயல்பட்டாலும் எல்லாப் பள்ளிகளிலும் பன்மொழிப் பயன்பாடு இருந்தே வருகிறது. தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் கல்விமொழி – முதல்மொழி என்றாலும் அங்கு மலாய், ஆங்கில மொழிகள் கற்பிக்கப் பெறுகின்றன. அவ்வவ் மொழிகளில் தேர்வுகளும் நடத்தப் பெறுகின்றன.

இடைஇடையே மலாய், ஆங்கில மொழிகளில் பேச்சு, எழுத்துப் போட்டிகள் நடந்தே வருகின்றன. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அப் போட்டிகளில் கலந்து மற்றஇன மாணவர்களுக்கு நிகராகத் தம் திறனை வெளிப்படுத்தியே வருகின்றனர். என்றாலும் தேசியப் பள்ளிக்குச் செல்லும் பொழுது தாய்மொழி தவிர்த்து மற்றப் பாடங்கள் தேசிய மொழியிலேயே நடக்கும். ஆங்கிலமும் கற்பிக்கப்பெறுகிறது. கற்ற குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குச் சிக்கல் பெரிதாக இல்லை. மிக விரைவில் தெளிவுபெற்று விடுவர். என்றாலும் அவர்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்பு, அளவற்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

பயிற்சி வகுப்புகளை நடத்துவது எப்படி?

மைஸ்கில் அறவாரியம்  வல்லுநர்கள் கொண்ட அமைப்பு, பின்னிலை அடைந்த மாணவர்களைச் சீர்படுத்தி வளர்த்துக் கைதூக்கி விடும் அறநிறுவனம். அந்நிறுவனம் நடத்தும் வகுப்புகள் மாணவர்களின் மனப் போக்கைக் கருத்தில் கொண்டு அவர்களைக் குழப்பிவிடாமல் தெளிவூட்டித் தன்னம்பிக்கை ஏற்படச் செய்யும் ஆற்றல் கொண்டவை.

பதினான்கு அகவை வரை குழந்தைப் பருவமென்பர். 16 அகவை வரை அது நீளும் என்றும் கூறுவர். 6ஆம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் 12 அகவை நிறைவு பெற்றவராக இருப்பர். 6 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் கற்ற அத்தனை மாணவர்களுக்கும் அந்த அறநிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியாது. அதன் பரிந்துரையோடும் வழிகாட்டுதலோடும் ஆங்காங்குள்ள நிறுவனங்கள் முன் வந்து நடத்தலாம். இப்பொழுது சமூக உணர்வு பெருகிவரும் சூழலில் ஓய்வுபெற்ற – உதவும் வாய்ப்பமைந்த ஆசிரியர்களைக் கொண்டு மேலே கண்டது போன்ற வகுப்புகளை நடத்தலாம்.

வகுப்பு நடத்துவதன் நோக்கம், மலாய் ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசிப் பழக்குதல், இடைநிலைப் பள்ளிகள் பற்றிய மருட்சியை நீக்குதல், என்னால் முடியும் என்னும் தன்னம்பிக்கை ஏற்படச் செய்தல் போன்ற அப்படைகளை மாணவர்களுக்கு ஏற்டுத்துவதாய் அமைதல் வேண்டும். அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மாணவர்களுக்குச் சலிப்பை, சோர்வை ஏற்படுத்துவனவாய் அமைந்துவிடுதல் கூடாது. மகிழ்ச்சியோடு புதியன கற்கிறோம் என்னும் உணர்வோடு அவர்கள் நடவடிக்கைகளில் விரும்பி ஈடுபடுமாறு எல்லாம் அமைதல் வேண்டும்.

இந்த அறப்பணியில் ஈடுபட எண்ணும் அமைப்புகள் மைஸ்கில் அறவாரியத்தை அணுகித் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த அறவாரியம் தேவைப்படுவோர்க்கு உரிய பயிற்சிகளை வழங்கலாம்.

இப் பணி மிகமிகப் பொறுப்புவாய்ந்த பணி; தன்னல உணர்வற்ற அறப்பணி; கைம்மாறு கருதாக் கடமை உணர்வு மிக்கபணி. நம் சமுதாயப் பிள்ளைகளை – எதிர்காலத் தலைமுறையை ஏற்ற முடையதாகச் செய்யும் ஈடு இணையற்ற பெரும்பணி. மாணவர்களைக் கல்வியில் உயர்த்தி, தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர வழிகாட்டினால் எல்லாவகை முன்னேற்றங்களையும் அவர்கள் அடைந்து விடுவர். வாய்ப்புகளுக்கு ஏங்கிக் கிடக்கும் தாழ்வு தானே அகலும்.

இவை வெற்று உரைகள் அல்ல. செல்ல வேண்டிய மிக நீண்ட பயணத்தின் தொடக்கப்புள்ளிகள். தமிழ்ப்பள்ளிகள் தொடங்கி இருநூறு ஆண்டுக்கு மேற்பட்ட காலத்தில் நம் மாணவர்கள் வெற்றிப் புள்ளிகளைத் தொட்டுக் கொண்டுதான் உள்ளனர். எனினும், அனைவருமே உயர்வுபெற வேண்டுமென்பது நம் நன் நோக்காகும். தன் கையே தனக்குதவி என்பதற்கேற்பச் செயல்படத் தொடங்கினால் உய்யலாம்! ஓங்கலாம்! உச்சி தொடலாம்!

“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்”  (குறள் 611)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here