அமித்ஷாவின் 2 நாள் தமிழக பிரசாரம் திடீர் ரத்து.. பின்னணி என்ன? சோகத்தில் பாஜக தலைவர்கள்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் என தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி போட்டியிடுகிறது. வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன.

இதில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாமகவுக்கு 10 இடங்கள், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமமுகம், தேவநாதன் யாதவின் இமகமுக ஆகியோருக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 4, 5 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் அமித்ஷா பிரசாரம் செய்வதாக கூறப்பட்டது.

அதாவது நாளை டெல்லியில் இருந்து தமிழகம் வரும் அமித்ஷா மதுரையில் இறங்குகிறார். அதன்பிறகு மதுரை, தேனி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளை மறுநாள் (ஏப்ரல் 5ம் தேதி) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக செய்து வந்தனர். இந்நிலையில் தான் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளை தமிழகம் வர இருந்த அமித்ஷாவின் பிரசார திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அமித்ஷா இன்னொரு நாளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன் விபரம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here