ஜெம்போல்:
ஜாலான் பஹாவ்-கெமாயான் வழியாக இருந்த போலீசாரின் சாலை மறியலில் நிற்காது சென்ற லோரி ஓட்டுநரை, 50 கிலோமீட்டர் துரத்திச் சென்று போலீசா கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தின்போது 21 வயதான சந்தேக நபரை கைது செய்வதற்கு முன்னதாக, அவரால் ஓட்டப்பட்ட லோரியின் டயர்களில் 10 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஜெம்போல் காவல்துறைத் தலைவர் ஹூ சாங் ஹூக் கூறினார்
“சந்தேக நபர் ஓட்டிச் சென்ற லோரி சாலையின் இரட்டைக் கோட்டில் திடீரென யு-டர்ன் செய்ததால், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது என்றும் அவர் கூறினார்.
“சந்தேக நபரின் லோரி டயர்களில் போலீசார் சுட்டபோதும், அவர் அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து தப்பிச் சென்றார். எனினும், மொபைல் ரோந்து வாகனத்தின் (MPV) உதவியுடன் அந்த நபர் ஒரு செம்பனை தோட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
பின்னர், சந்தேக நபர் ஜெம்போல் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் மெத்தாம்பேட்டமைன் பாவித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 307, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42(1) மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.





















