ஸ்பெய்ன் லா லீகா கிண்ணம் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 1-0 என்ற கோலில் மலோர்க்கா கிளப்பை தோற்கடித்துள்ளது. இந்த வெற்றியின் வழி லீக் பட்டியலில் அது தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்த ஆட்டம் மலோர்க்கா அரங்கில் நடைபெற்ற போதிலும் ரியல் மெட்ரிட் அணியே ஆட்டத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் 25 மீட்டர் தூரத்திலிருந்து ரியல் மெட்ரிட்டின் அருலெனியன் டச்மேனி அடித்தே ஒரே கோல் அதன் வெற்றியை உறுதி செய்திருக்கின்றது.
அதோடு, வரும் வாரத்தில், ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில், மென்செஸ்டர் சிட்டிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அருலெனியன் டச்மேனி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் தனது பரம வைரீயான பார்சிலோனாவை அல் கிளாசிக்கோ ஆட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் ரியல் மெட்ரிட், அந்த அணியைக் காட்டிலும் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் 78 புள்ளிகளோடு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனிடையே, பார்சிலோனாவும் 1-0 எனும் நிலையில் காடிஸ் கிளப்பை வீழ்த்தி உள்ளது. இதன்வழி பார்சா 70 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.