முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்தவர் இந்திரகுமாரி. கவிதை எழுதுவதிலும், மேடைப்பேச்சிலும் திறமையாளரான இந்திரகுமாரி எம்ஜிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் நாட்ரம்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர் புலவர் இந்திரகுமாரி. இவர் 1991 – 1996 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்திரகுமாரி 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த இந்திரகுமாரிக்கு இலக்கிய அணியில் மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர், இலக்கிய அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. முன்னதாக, அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பொருட்கள் வழங்கியதில் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த ஊழல் வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்திரகுமாரிக்கும் அவரது கணவர் பாபுவுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புலவர் இந்திரகுமாரி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் புலவர் இந்திரகுமாரி. அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புலவர் இந்திர குமாரி உடல் அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. புலவர் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதலமைச்சரும் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தி.மு.க. இலக்கிய அணி தலைவர் இந்திரகுமாரி, மறைந்த துயர செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான இந்திரகுமாரி, தமிழக அமைச்சரவையில் இடம் பெற்று மக்களுக்கு பணியாற்றியவர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here