ஆம்ஸ்டர்டம்:
நெதர்லாந்து ஆகாயப் போக்குவரத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் முடங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அது மூன்று மணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாகவும் நெதர்லாந்து ஆகாயக் கட்டுப்பாட்டு நிலையம் கூறியது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அது குறிப்பிட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில விமானங்களுக்கு மட்டுமே நெதர்லாந்து வான்வழியில் அனுமதி வழங்கப்பட்டது. தரையிறங்கச் சென்ற விமானங்கள் அருகில் உள்ள மற்ற வட்டாரங்களில் இருக்கும் விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.
ஆம்ஸ்டர்டமின் ஸ்கிபால் விமான நிலையம் ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. தொழில்நுட்பக் கோளாறால் அதன் தினசரி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.