வருமானம் தேடுவதற்காக 26 வயது முகமட் நகியுடின் அப்துல் ஹலிம் ஒவ்வோர் இரவும் பத்து பகாட்டிலிருந்து ஜோகூர் பாரு வரை 250 கிலோமீட்டர் சென்று திரும்புகிறார்.
சாலைகளில் பழுதடையும் மோட்டார் சைக்கிள்களை பழுதுபார்க்கும் தொழிலை அவர் செய்து வருகிறார். மலேசியத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று திரும்பும்போது மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சராவது, பழுதடைவது போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கியதை கண்டபின்னர் தமக்கு இந்த சிந்தனை பிறந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாளும் 250 கிலோமீட்டர் சென்றுதிரும்புவது என்பது மிகவும் அசதியாகவும் களைப்பாகவும் இருக்கும். ஆனால் தாய் தந்தைக்கு உதவுவதற்கும் டிப்ளோமா கல்வி பயிலும் ஓர் உடன்பிறப்பு உட்பட பள்ளி செல்லும் 4 உடன்பிறப்புகளுக்கு உதவிடவும் இந்த தொழிலைத் தாம் விரும்பி செய்வதாக முகமட் நகியுடின் கூறினார்.
சிங்கப்பூரில் வேலை தேடி கிடைக்காதபட்சத்தில் நோன்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இத்தொழிலில் தாம் களம் இறங்கியதாக பத்து பகாட் பெர்செராயைச் சேர்ந்த அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கோலாலம்பூரில் ஒரு தொழிற்சாலையில் 9 மாதங்கள் பணிபுரிந்தேன். சம்பளம் கொடுக்காததால் நான் சொந்த கம்பத்திற்கே திரும்பிவிட்டேன். தனக்கு உதவியாக ஆப்பெங் என்று அழைக்கப்படும் என்னுடைய 29 வயது நண்பர் முகமட் அஸாரி முஸ்தபா இருக்கிறார்.
என்னுடைய இந்த சேவை குறித்து என் ஃபேஸ்புக்கில் தகவல் அளித்திருக்கிறேன். மலேசியா– சிங்கப்பூர் தொழிலாளர்கள் தம்மை அழைக்கலாம் என்ற தகவலையும் அதில் இணைத்திருக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது,
இச்சேவை குறித்து ஃபேஸ்புக், டிக்டாக் ஆகியவற்றில் நான் பதிவிட்டிருக்கும் தகவலை பார்த்து பல மோட்டார் சைக்கிளோட்டிகள் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
மாலை 6 மணியளவில் பத்து பகாட்டிலிருந்து புறப்படும் நான் இரவு 8 மணியளவில் ஜோகூர் பாருவை சென்றடைவேன். அதிகாலையில் நான் பத்து பகாட்டிற்கு புறப்படுவேன்.
இரவு வேளையில் ஒவ்வொரு நாளும் பத்து பகாட்டிலிருந்து ஜோகூர் பாருவுக்கும் ஜோகூர் பாருவிலிருந்து பத்து பகாட்டிற்கும் சென்று திரும்புவதை பலர் முதலில் நம்பவில்லை. ஆனால் பலர் இப்போது என்னுடைய சேவையை தெரிந்து கொண்டு அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆதரவும் பெருகி வருகிறது.
சாலையில் பழுதடையும் மோட்டார் சைக்கிள்களை நான் சரி செய்து தருகிறேன். இதனால் பலருக்கு என்னால் உதவ முடிகிறது என்ற மனதிருப்தி இப்போது ஏற்பட்டிருக்கிறது என்று முகமட் நகியுடின் குறிப்பிட்டார்.