எந்த குறை என்றாலும் கந்தக் கடவுளிடம் முறையிட்டால் வந்த வினையும், இனி வரவிருக்கும் வினைகளும் ஓடி விடும் என்பார்கள். ஆனால் முருகனை எப்படி வழிபட்டால் அவரது அருளை பெற முடியும்? கடுமையான விரதம் இருக்க வேண்டுமா? என்ன மந்திரம் சொல்ல வேண்டும்? எத்தனை நாட்கள், எத்தனை முறை சொல்ல வேண்டும்? என்பது போன்ற பல குழப்பங்களும், கேள்விகளும் இருக்கும். இதற்கு அருணகிரிநாதர் தன்னுடைய பாடலிலேயே பதில் சொல்லி உள்ளார்.
அருணகிரிநாதர், தான் பெற்றதை போல் உலகில் உள்ள அனைவரும் முருகப் பெருமானின் அருளையும், தரிசனத்தையும் பெற வேண்டும், அவர்களின் மனக்குறைகள் நீங்கி, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பல ஆயிரம் பாடல்களை திருப்புகழ் தொகுப்பாக பாடி வைத்துள்ளார். அதனால் தான் முருகனின் அருளை பெற வேண்டும் என்றாலும் சரி, என்ன பிரச்சனை நீங்க வேண்டும் என்றாலும் சரி திருப்புகழ் பாடுங்கள் என ஆன்றோர்கள் வழிகாட்டுகிறார்கள்.
பொதுவாக எந்த கடவுளின் முன் போய் நின்றாலும் நமக்கு கேட்பதற்கு பல கேள்விகள், கோரிக்கை வைப்பதற்கு பல விஷயங்கள், கொட்டி தீர்ப்பதற்கு பல கஷ்டங்கள், குறைகள் இருக்கும். இவற்றை தான் கடவுளின் முன் பட்டியல் இடுகிறோம். ஆனால் இந்த உலகத்தையே படைத்து, இயக்கிக் கொண்டிருக்கும் அந்த இறைவனுக்கு தெரியாதா, நமக்கு எப்போது என்ன கொடுக்க வேண்டும் என்று? இப்படி எதையும் சொல்லி புலம்பாமல், “முருகா எனக்கு உன்னைத் தவிர எதுவும் வேண்டாம். எனக்குள் இருக்கும் தீயவை அனைத்தையும் நீக்கி, உன்னுடைய பக்தராக இருக்கும் தகுதியை எனக்கு கொடு” என்று மட்டும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும் என அருணகிரிநாதர் சொல்கிறார்.





















