3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 759 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்:

நீண்ட வறண்ட காலநிலைக்கு பின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மூன்று மாநிலங்களில் உள்ள மொத்தம் ஆறு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 700க்கும் மேற்பட்டோர் இன்னமும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவில் 1,319 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை 6 மணி நிலவரப்படி 759 பேராகக் குறைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை சிலாங்கூரின் கிள்ளானில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேராகவும், கோல சிலாங்கூரில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேராகவும், பெட்டாலிங்கில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 382 பேராகவும் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் நெகிரி செம்பிலானில், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் ரெம்பாவ்வில் உள்ள நிவாரண மையத்திலும், ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் போர்ட்டிக்சனிலும் தங்கியுள்ளனர்.

மேலும் மலாக்காவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் அலோர் கஜாவில் உள்ள நிவாரண மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிலாங்கூரின் பெக்கான் மேருவில் உள்ள கிள்ளான் ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here