கோலாலம்பூர்:
பினாங்கின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பத்து ஃபெரிங்கி (Batu Ferringhi) கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடுமையான மண் அரிப்பைத் தடுத்து, அதனைப் பாதுகாக்கும் நோக்கில் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அவசரக் காலத் திட்டத்தை மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
அலைகளின் பேராபத்திலிருந்து கடற்கரையை மீட்டெடுக்க, 62 பிரம்மாண்ட மணல் கொள்கலன்களைக் (Geotextile Containers) கொண்டு 5 அடுக்குத் தடுப்பரண் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை 8-ஆம் தேதி தொடங்கிய இப்பணிகள், வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் நிறைவுபெறும் வகையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மோசமான காலநிலை மற்றும் கனரக இயந்திரங்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், பொது உள்கட்டமைப்புகளையும் சுற்றுலாவையும் பாதுகாப்பதற்காக இந்த இடைக்காலத் திட்டம் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த தற்காலிகத் தடுப்பு நடவடிக்கை அடுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும். இது, 12-ஆவது மலேசியத் திட்டத்தின் (12MP) கீழ் அமையவிருக்கும் நிரந்தரக் கடற்கரைப் பாதுகாப்பு உத்திக்கு ஒரு வலிமையான அடித்தளமாக அமையும் என்று, மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் குழுவின் தலைவர் சைரில் கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.



















