இந்தியப் பெண் தொழில்முனைவோர்களுக்கு உதவுவதற்கு பெண் திட்டத்தின் கீழ் நிதி உதவி யார் யார் மனு செய்யலாம்?

அமானா இக்தியார் மலேசியா (ஏஐஎம்) தன்னுடைய உள் நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியாக ஒதுக்கியிருக்கிறது. இதற்கான  விண்ணப்பங்களுக்கு 2024 ஏப்ரல் 15ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள 124 ஏஐஎம் கிளைகளில் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம். ஒருவர் 3,000 ரிங்கிட்டிலிருந்து 30,000 ரிங்கிட் வரை விண்ணப்பம் செய்யலாம்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் 7,100 பெண் தொழில்முனைவோர்கள் பயன்பெறுவர் என்று தொழில்முனைவோர், மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு இந்தியப் பெண் தொழில்முனைவோர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இத்திட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கு நாடு முழுவதும் இதன் தொடர்பான விளக்கக்கூட்டங்களும் நடத்தப்படும் என்றார்.

பெண் (P.E.N.N.- Prosperity, Empowerment & a New Normal

For Indian Woman) திட்டமானது நாட்டில் இந்திய தொழில்முனைவோர் அவர்களின் வியாபாரம், தொழிலை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

வியாபாரம், தொழில்துறைகளில் முன்னேறும் இந்தியப் பெண்கள் அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் மேன்மைக்குக் கொண்டு செல்வர். அவர்களின் வாழ்க்கை நிலையும் உயரும். இந்த உதவிகள் மூலம் வாழ்க்கையில் ஓர் உயர்ந்த நிலையை அடையும் இந்தியப் பெண் தொழில்முனைவோர்கள் இந்திய சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுக்கும் மனப்பக்குவத்தைப் பெறுவர் என்று சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் தெரிவித்தார்.

விவசாயம், மீன் வளர்ப்பு, சேவைகள் துறை, சில்லறை வியாபாரம், தாயாரிப்பு போன்ற தொழில்துறைகளுக்கு நிதி கேட்டு இந்திய தொழில்முனைவோர் மனுச் செய்யலாம். இவர்கள் பெறும் இந்தக் கடனுதவிக்கு தக்காஃபுல் காப்புறுதி பாதுகாப்பு உண்டு.

ஏஐஎம் நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு மனுவும் 16 வேலை நாட்களில் அங்கீகரிக்கப்படும்.  இப்போது தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களும் மொத்த குடும்ப வருமானம் 5,880 ரிங்கிட்டிற்கு மேல்போகாத வருமானம் பெறும் பி50 பிரிவைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோரும் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோர் மலேசியப் பிரஜையாகவும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் மலேசிய இந்தியராகவும் இருப்பது அவசியம். மொத்த குடும்ப வருமானம் 5,880 ரிங்கிட், மேலும் 1,470 ரிங்கிட்டிற்கு மேல்போகாமல்  இருக்க வேண்டும்.  புதிதாக வியாபாரம் அல்லது தொழில் தொடங்கியிருப்பவர்களும் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதிவு பெற்ற நிறுவனம் வைத்திராதவர்களும் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களும் பெண் திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த நிதியை ஏஐஎம் தயாரித்து வைத்திருக்கும் அட்டவணையின் கீழ் பணத்தை திருப்பிச் செலுத்தலாம்.

 அமானா இக்தியார் மலேசியாவில் உறுப்பியம் பெறுவதற்கு 5 பேர் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். நிர்வாகத் திறமை தொடர்பாக 3 தினங்களுக்கு நடத்தப்படும் பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் 1 மணி நேரம் இந்தப் பயிற்சி நடத்தப்படும். அதன் பிறகே அமானா இக்தியார் மலேசியாவில் உறுப்பினராக முடியும். தலைமையகத்தில் ஒவ்வொரு  வாரமும் நடத்தப்படும் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்று டத்தோ ரமணன் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here