கோலகுபுபாரு இடைத்தேர்தல் இந்தியர் ஆதரவு அலை திசை மாறுமா?

 

*    ம.இ.ம. கட்சியால் பெரிக்காத்தான் நேஷனல் கூடுதல் வலிமை பெறுமா?

* பொறுத்திருந்து பார்ப்போம் என்னும் மனநிலையில் இந்திய வாக்காளர்கள்

* சொன்னதைச் செய்யாத அரசியல் கட்சியின் மீது சில தரப்பினர் அதிருப்தி

      கோலகுபுபாரு சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தல் பக்கம் தற்போது மக்களின் பார்வை திரும்பியிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலம் வரத் தொடங்கியிருக்கிறது.

     கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி எம்ஐபிபி எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் உறுப்புக் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டணியில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சியாக இந்தக்  கட்சி தற்போது விளங்குகிறது.

ஆதரவு எப்படி?

     இந்த இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக  இந்திய வாக்காளர்களைக் கவரக்கூடிய ஆற்றல் எம்ஐபிபி கட்சிக்கு எந்த அளவு உள்ளது என்பதற்கான ஒரு சோதனைக்களமாகவே இடைத் தேர்தல்கள் அமைய முடியுமென்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

     பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைப் பொறுத்தவரையில் மலாய்க்காரர் அல்லாதவரின் ஆதரவைத் திரட்டுவதில் அது இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பெரிக்காத்தான் நேஷனல் உறுப்புக் கட்சியாக புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க இந்திய சமூகத்தினர் வெளிப்படையான மனப்போக்கைக் கொண்டிருப்பது தெரியவருகிறது என்று மலேசியா கினி கூறியிருக்கிறது.

     தங்களுக்கு உதவுவதில் அந்தக் கட்சிக்கு ஒரு தெளிவான இலக்கு திசை இருக்குமானால் அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கும் மனநிலையில்தான் அவர்கள் உள்ளனர்.

என்ன செய்யப் போகிறது எம்ஐபிபி?

     இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு குறிப்பாக வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதில் பெரிக்காத்தான் நேஷனல் உறுப்புக் கட்சிகள் மாற்றுத் திட்டங்களை முன்னெடுத்தால் அந்த உறுப்புக் கட்சிகளுக்கும் எம்ஐபிபி கட்சிக்கும்  ஆதரவளிக்க அல்லது வாக்களிக்க  திறந்த மனப்போக்கைக் கொண்டிருப்பதாக யுகன் என்பவர் தெரிவித்தார்.

     ஆனால்,  மஇமக என்று அழைக்கப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு இப்போதே ஒரு மதிப்பீடு செய்யும்  நிலையில் தாம் இல்லை என்றும் அவர் சொன்னார்.

     ஆனால், அவர்களின் செயல்பாடுகள் குறித்து இன்னும் நிறைய விஷயங்களை அறிந்துகொள்ள நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வெறுத்துவிட்டது

     சில அரசியல்வாதிகள் சொன்னபடி நடந்து கொள்வதில்லை. வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை. இதனால் அவர்கள் மீது வெறுப்புதான் உள்ளது.

     ஆகவே, பொறுத்திருந்து  பார்ப்போம் என்ற அணுகுமுறையைத் தேர்வு செய்திருக்கிறேன் என்று யுகன் தெரிவித்தார். எந்த அரசியல் கட்சியை ஆதரிப்பது எனும் முடிவுக்கு நான் இன்னும் வரவில்லை.

     ஏனென்றால், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள். ஆனால், எதுவும் செய்வதில்லை என்று அவர் சொன்னார். இப்போதுள்ள அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் முன்னாள் பிரதமர் நடத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான பாரிசான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு உதவ நிறைய செய்திருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

திசை மாறலாம்

     நடப்பு அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு உதவ  பெரிய அளவில் எதையும் செய்யவில்லை. இதனால், இந்தியர்கள் ஏமாற்றம்                    அடைந்திருக்கின்றனர். ஆகவே, இந்த முறை மஇம கட்சியை ஆதரிக்கும் சாத்தியம் உள்ளது என்று மலர்மாலை வியாபாரியான 38 வயது விஜயன் ராசப்பன் தெரிவித்தார்.

     தற்போது மிகவும் சிரமமான  காலகட்டமாக இருக்கிறது என்றும் ஆனால், பெரிய அளவில் உதவிகள் கிடைப்பதில்லை என்றும் விஜயன் ஏமாற்றம் தெரிவித்தார்.

     மக்களுக்கு  உதவ என்ன கொள்கைகளை முன்வைக்கிறார்கள் எனும் அடிப்படையில்தான் எந்தக் கட்சியை ஆதரிக்க மதிப்பீடு செய்வது பற்றி முடிவு செய்வேன் என ஓய்வு பெற்ற ஆசிரியர் கணேசனார் வயது 62 தெரிவித்தார்.

     எந்தக் கட்சி  மக்கள் நலனைப் பாதுகாக்கிறதோ அந்தக் கட்சியை நான் ஆதரிப்பேன்.  மக்கள் நலனுக்காகப் பாடுபடும் பெரிக்காத்தான் நேஷனலாக இருந்தாலும் சரி, ம.இ.ம. கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களை நான் ஆதரிப்பேன் என்றார் அவர்.

     நமக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் இந்த நாட்டின் இன சுபிட்சத்தைப் பாதித்துவிடக்கூடாது என்றார் அவர்.

கூடுதல் வலிமையா?

     இதற்கிடையே,  பெரிக்காத்தான் நேஷனலில் ம.இ.ம. கட்சி சேர்ந்திருப்பதால் அந்தக் கூட்டணிக்கு புதிய வலிமை கிடைத்திருக்கிறதா என்பதை இப்போதைக்கு கூறிவிட முடியாது என்று யுஐடிஎம் பல்கலைக்கழகத்தின் தொடர்புத்துறை விரிவுரையாளர் நூர் நிர்வாண்டி தெரிவித்தார்.

     ஆயினும்,  கோலகுபுபாரு இடைத்தேர்தல் இதற்கான அளவுகோலாக அமையும் என்றும் அவர் சொன்னார். ம.இ.ம. கட்சியை ஏற்றுக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் பல்வகைத் தன்மை கொண்ட ஒரு பெரிய கூட்டணியாக உருவாகத் தயாராகிவருகிறது என்று  அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன் கருத்துரைத்தார்.

     இந்தக் கூட்டணிக்காக இந்திய வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் மிகப் பெரிய பொறுப்பை ம.இ.ம.க. தேசியத் தலைவர் எஸ்.பி. புனிதன் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் சொன்னார்.

     பாஸ், பெர்சத்து ஆகிய கட்சிகளுடன் அடிக்கடி தொடர்புப்படுத்தப்படும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ம.இ.ம.க.  கூடுதல் மதிப்பைத் தரும் என்று அவர் கூறினார். இந்தக் கூட்டணியில் கெராக்கான் கட்சியும் இணைந்திருக்கிறது.

மாற்றுக் கருத்து

     இதற்கிடையே, நடப்பு அரசாங்கத்தின் செயல்திறன் மீது இந்தியர்களுள் ஒரு தரப்பினர் மனநிறைவு கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரியவருவதாக மலேசியா கினி கூறியிருக்கிறது.

     தற்போது இன அடிப்படையில் பலர் அரசியல் கட்சி குறித்து  பேசுவது வேதனை அளிக்கிறது என்று பணி ஓய்வு பெற்ற அரசு பணியாளர் ஜார்ஜ் தோமஸ் கூறினார்.

     மலேசியாவிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உதவக்கூடிய அரசியல் கட்சிகளை நாம் பார்க்க வேண்டும். இந்திய சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதோடு மலேசிய மக்களுக்கு உதவவேண்டும் என்பதுதான் சிறப்பாக அமையும் என்றார் அவர்.

     நடப்பு அரசாங்கம் பி40 தரப்பு மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.  இந்திய சமூகத்தில் பெரும்பகுதியினர் பி40 தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

     சிரமப்படுவோருக்கு உதவிகள் போய்ச் சேர வேண்டும் என்று அவர் சொன்னார். இந்திய சமூகத்தினருக்கு மித்ரா உதவுவது பாராட்டுக்குரியது என ரோஜாக் வியாபாரி ஜோசப் ஜெகன் தெரிவித்தார். ரோஜாக் வியாபாரம் செய்ய மித்ரா எனக்கு அனைத்து உபகரணங்களையும் வழங்கி உதவியிருக்கிறது என்று அவர் மேலும் சொன்னார். இன்னும் பல இளைஞர்கள் நாட்டு அரசியல் மீது நாட்டம் கொண்டிருக்கவில்லை. அரசியல் கட்சிகள் வெற்று வாக்குறுதிகளை அளிக்கின்றன. எதையும் செய்வதில்லை என்று மெக்கானிக் ஷான் ராவ், விற்பனையாளர் கஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here