கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய்; கையிலிருந்த மொத்த பணத்தையும் தந்து உதவிய நடிகர் பாலா!

நேற்று நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றிருந்த நடிகர் பாலாவிடம் ஒரு அம்மா, அவரது மகனின் படிப்பிற்காக உதவி கேட்டிருக்கிறார். இதனைக் கேட்டு உருகிய பாலா உடனே தனது கையில் இருந்த மொத்தப் பணத்தையும் தந்து உதவியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

’கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலா சமீபகாலமாக தனது உதவிகள் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார். மலைக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், கர்ப்பிணி, வயதானவர்களுக்கு உதவி, இலவச ஆட்டோ, பேரிடர் காலத்தில் களத்தில் இறங்கி உதவியது என இவரது செயல்கள் நெகிழ வைத்துள்ளது.

இந்தத் தொடர் உதவிகளுக்காக 15-வது நார்வே ஃபிலிம் ஃபெஸ்டிவலில் டாக்டர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை விஜய்காந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்துவதற்காக பாலா நேற்று விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றிருந்தார். அங்கு தனியாளாக தனது மகனை வளர்த்து வரும் ஒரு அம்மா பாலாவிடம் உதவி கேட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “விஜயகாந்த் சார் பெயரிலான இந்த விருது பெற நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. எனது கனவுகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது. இதை அவரின் கோயிலில் வைத்து ஆசி பெற வந்தேன். அப்போது, எதிர்பாராத விதமாக தனது மகனின் படிப்பிற்கு போராடும் சிங்கிள் மதரை அங்கு சந்தித்தேன்.
விஷயத்தை சொன்னதும் உடனே என் கையில் இருந்த மொத்தப் பணத்தையும் கொடுத்து விட்டேன். கேப்டன் சார் நினைவிடம் முன்பு இந்த விஷயத்தை செய்ததில் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார். இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here