மலேசியாவில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

கோலாலம்பூர்:

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் ஆகிய துறைகளில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை (RM10.5 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக நேற்று (மே 2) உறுதியளித்துள்ளது.

மலேசியாவின் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவுவது இதன் நோக்கம் என்று, மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நதெல்லா கூறினார்.

இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு முதலீட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சத்யா நதெல்லா, தரவு நிலையங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், கிளவுட் சேவை ஆகியவை தொடர்பான பல்வேறு முதலீடுகள் குறித்து இப்பயணத்தில் அவர் அறிவிப்பார்.

“மலேசியாவின் மின்னிலக்க உருமாற்றத்துக்கு உதவும் வகையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் 2.2 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் 32 ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் செய்யும் மிகப் பெரிய முதலீடு இது,” என்று, நேற்று புத்ராஜெயாவில் நடந்த நிகழ்வில் ஆற்றிய உரையில் நதெல்லா கூறினார்.

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு நிலையத்தை உருவாக்கவும் கிட்டத்தட்ட 200,000 மலேசியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

“மலேசியாவின் மின்னிலக்க உருமாற்றத்துக்கு ஆதரவு வழங்கவும் அதன் மூலம் மலேசியர்கள் அனைவரும் பயனடைவதை உறுதிசெய்யவும் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.

இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதலீட்டை வரவேற்பதாக கூறிய பிரதமர் அன்வார் இப்ராகிம், முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும் அரசியல் நிலைத்தன்மையுடனும் மலேசியா உலகளவில் விளங்குவதற்கான சான்று இது என்று கூறினார்.

நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறனை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு இத்தகைய முதலீடுகள் முக்கியப் பங்களிக்கும் என்று, பிரதமர் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தோனேசியாவில் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை நதெல்லா அறிவித்தார். அதேநேரம் தாய்லாந்திலும் கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய தரவு நிலையத்தை அமைக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here