விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் உள்ள விண்கலத்திலிருந்து லேசர் சிக்னல் பூமிக்கு வந்துள்ளதாக நாசா மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களுக்கு இடையே இந்த சிறுகோள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக சிறுகோள்கள் பெரிய கற்களால் ஆனவை என்று அறியப்பட்டுள்ள நிலையில் இந்த சிறுகோளானது உலோகங்களானதாக கருதப்படுகிறது. இந்த சிறுகோளின் பெயரை ஒட்டியே இந்த புதிய விண்கலத்திற்கு சைக் என நாசா பெயர் சூட்டியது.

இந்த விண்கலம் லேசர் தொலைதொடர்பு பற்றிய பரிசோதனையிலும் ஈடுபடும் பணியை மேற்கொண்டுள்ளது. இதற்காக டி.எஸ்.ஓ.சி எனப்படும், விண்வெளியின் ஆழ்ந்த ஒளி வழியான தொலைத்தொடர்புகளைக் கண்டறியும் சாதனம் சைக் விண்கலத்தில் உள்ளது. இதன் உதவியால் விண்வெளியில், தொலைதூரத்தில் இருந்து கொண்டு லேசர் வழியேயான தொலைதொடர்புகளை ஏற்படுத்துவது சாத்தியப்படும்.
இந்த நிலையில், டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பத்தின் திறனை நிரூபிக்கும் வகையில் அதிலிருந்து லேசர் சிக்னல் பூமிக்கு கிடைத்துள்ளது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து அந்த விண்கலம் தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவைப் போன்று 1.5 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் இலக்கை விட 25 மடங்கு கூடுதலான விகிதத்தில் தரவுகளைப் பரிமாறி விண்கலம் சாதனை படைத்துள்ளது. அதனுடன், சைக் 16 சிறுகோளை நோக்கிய தன்னுடைய பயணத்தில் தொடர்ந்து, நிலையாக மற்றும் இயல்பாக சைக் ஈடுபட்டு வருகிறது என நாசா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.



















