2023 எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் வரும் 2024 மே 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது. நாடு முழுவதும் மொத்தம் 3,340 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 870 மாணவர்கள் பரீட்சை எழுதினர்.
பள்ளிகளில் 2023 எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்கள் அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் முடிவுகளை தத்தம் பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதேசமயத்தில் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு அமர்வுக்கு பதிவு செய்து கொண்ட மாநில கல்வி இலாகாக்களில் நேரடியாக முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளிகளைப் பொறுத்தவரை தேர்வு முடிவுகள் மிக நேர்த்தியான முறையில் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழி எஸ்.பி.எம். முடிவுகளை தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் 2024 மே 27ஆம் தேதி காலை 10.00 மணி தொடங்கி 2024 ஜூன் 2ஆம் தேதி மாலை 6.௦௦ மணிவரை myresultspm.moe.gov.my எனும் வலைத்தளத்தை வலம் வரலாம். அல்லது எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் வழி அவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
2024 மே 27ஆம் தேதி காலை 10.00 மணி தொடங்கி 2024 ஜூன் 2ஆம் தேதி மாலை 6.00 வரை எஸ்.எம்.எஸ். சேவை வழி முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். SPM<jarak>NoKP<jarak>AngkaGiliran dan hantar ke 15888.
2023 எஸ்.பி.எம். தேர்வுக்கு அமர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. கல்வியில் தொடர்ந்து சிறப்பு அடைவு நிலைகளைப் பெற்று வெற்றி பெறவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.