கோலாலம்பூர்:
பகாங்கின், கெந்திங் ஹைலேண்ட்ஸ்க்கு சமீபத்தில் “பிக்னிக்” சென்ற குழு ஒன்று, அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் கேஸ் அடுப்பில் சமைப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்களிடையே எரிச்சலையும் கோபத்தையும் தூண்டிவிட்டுள்ளது.
பெட்ரோல் நிலையத்தில் சமையல் செய்யும் செயல்பாடுகளைக் காட்டும் 50 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப் தொடர்பான புகாரை தாம் பெற்றதாக பெந்தோங் மாவட்ட காவல்துறை தலைவர் ஜெய்காம் முஹமட் கஹார் கூறினார்.
“விசாரணையின் முடிவில், குறித்த வீடியோ மே 13 அன்று பதிவேற்றப்பட்டது என்றும், பொது இடத்தில் தொல்லை விளைவித்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 268வது பிரிவு, உயிருக்கு அல்லது பிறரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 336 கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் சொன்னார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸ் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.