ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தில் ஆடவர் வெறிச்செயல்; இரு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் பலி!

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில், இன்று மே 17ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இரு போலீஸ்காரர்கள் உட்பட மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் அதிகாலை 2 மணியளவில் ஆயுதமேந்தி, உலு திராம் காவல் நிலையத்துக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.

சந்தேகத்துக்குரிய அந்த ஆடவர் காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை வெட்டியதாகக் கூறப்பட்டது. அந்தக் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாண்ட காவலரின் துப்பாக்கியை எடுத்து அந்த ஆடவர், சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலரையும் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அந்த இடத்திற்கு விரைந்த மூன்றாவது காவலர், 30களில் இருந்த தாக்குதல்காரரைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

விரைவில் இச்சம்பவம் குறித்துக் காவல்துறை, அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here