அமெரிக்காவில் வீசிய சூறாவளியில் நால்வர் மரணம்

டெக்சஸ்:

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வியாழக்கிழமை (மே 16) வீசிய பலத்த சூறாவளியில் நால்வர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றால் உயர்மாடிக் கட்டடங்களின் கண்ணாடிச் சன்னல்கள் சேதமுற்றதாகவும் கிட்டத்தட்ட 800,000 வீடுகளுக்கு மின்விநியோகம் தடைபட்டதாகவும் நகர மேயர் ஜான் வைட்மைர் தெரிவித்தார்.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் அறுந்து விழுந்த மின்கம்பிகளும் சேதமடைந்த சன்னல்களிலிருந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளும் காணப்படுவதாக அவர் கூறினார்.

போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளும் சாலை விளக்குகளும் செயல்படவில்லை என்று உள்ளூர்த் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மேயர் குறிப்பிட்டார்.

மணிக்கு 129 முதல் 161 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அவர் கூறினார். வெளிப்புறங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படிப் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை அரசாங்கப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று கூறிய மேயர், அத்தியாவசியப் பணிகளில் இருப்போர் தவிர்த்து மற்ற ஊழியர்கள் வேலைக்குச் செல்லவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார்.

சூறாவளியால் மரங்கள் விழுந்ததில் நால்வர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேயர் கூறினார்.

ஹூஸ்டன் வட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் வெள்ள அபாயம் குறித்து வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here