நாளை பாஜக அலுவலகம் வருகிறோம்; யாரை வேண்டுமானாலும் கைது செய்யுங்கள்-அர்விந்த் கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நாளை பாஜக தலைமையகத்துக்குச் செல்வேன் என்றும், ஆளும் கட்சி எங்களில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யட்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேஜ்ரிவாலின் உதவியாளரும், அவரின் முன்னாள் தனிச் செயலாளருமான பிபவ் குமார் டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அர்விந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “பிரதமர் மோடி ஜி அவர்களே, மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அஜ்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரை ஒவ்வொருவராக சிறையில் அடைத்து இந்த சிறை விளையாட்டை விளையாடுகிறீர்கள். நான், எனது கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமையகத்திற்கு வருவேன். யாரையெல்லாம் நீங்கள் சிறையில் அடைக்க விரும்புகிறீர்களோ, அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கைது செய்யலாம்.

சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தார்கள். இன்று எனது உதவியாளரை (பிபவ் குமாரை) சிறையில் அடைத்துள்ளனர். இப்போது ராகவ் சதா லண்டனில் இருந்து திரும்பி வந்துவிட்டார், அவரையும் சிறையில் அடைப்பார்கள். சௌரப் பரத்வாஜை சிறையில் அடைப்போம் என்கிறார்கள் மற்றும் அதிஷியையும் சிறையில் தள்ளுவோம் என்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க ஆளும் கட்சி விரும்புவது ஏன்?.

எங்கள் தவறு என்ன என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். டெல்லியில் ஏழைகளுக்கு தரமான கல்வியை நாங்கள் வழங்கினோம், பாஜகவால் அதைச் செய்ய முடியவில்லை. எங்கள் தவறு என்னவென்றால், நாங்கள் நகரத்தில் மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கினோம். மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கினோம். ஆனால், அவர்கள் மொஹல்லா கிளினிக்குகளை நிறுத்த விரும்புகிறார்கள்.

எங்கள் கட்சியின் தலைவர்களை சிறையில் அடைத்து ஆம் ஆத்மி கட்சியை நசுக்க பாஜக நினைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி அப்படி நசுக்கப்படாது, ஆம் ஆத்மி கட்சி என்பது இப்போது மக்களின் இதயத்தில் இருக்கிறது” என்று அவர் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு பதிலளித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, “இந்த நாடகத்தை நிறுத்துங்கள். நாங்கள் உங்களிடம் ஒன்றுதான் கேட்கிறோம். உங்கள் பெண் எம்.பி. வீட்டில் வைத்து தாக்கப்பட்டு ஆறு நாட்கள் ஆன பிறகும் நீங்கள் மவுனம் கலைக்கவில்லை. பெண் எம்.பி.யிடம் தவறாக நடந்துகொண்டதற்கு யார் காரணம் என்று சொல்லுங்கள். ஏன்? அதைப்பற்றி நீங்கள் மவுனத்தை கலைக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here