ரிம. 2,102 எப்போது கைகூடும்? விரைந்து அமலாகுமா?

எம்.எஸ். மலையாண்டி

* 1,500 ரிங்கிட் சம்பளத்தில் இனியும் செலவுகளைச் சமாளிக்க முடியாது

* பேங்க் நெகாராவின் குறைந்தபட்ச சம்பள விகிதம் மாதம் 2,700 ரிங்கிட்

* என்ன சொல்லப்போகிறது முதலாளிகள் தரப்பு? ஏற்றுக் கொள்வார்களா?

தொழிலாளர்களுக்கான 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தை 2,102 ரிங்கிட்டாக உயர்த்தும் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் புதிய சம்பள விகிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது எப்போது அமலுக்கு வரும் என்று தொழிலாளர் தரப்பினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  இந்தப் புதிய சம்பளம் விரைவில் நடப்புக்கு வர வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

மலேசியாவில் தொழிலாளர்களுக்கான 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள விகிதம் 2022 மே முதல் தேதி அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த நடைமுறை ஈராண்டுகளைக் கடந்து விட்டது. இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள விகிதம் உயர்த்தப்பட வேண்டும் என்று பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் உள்ளிட்ட பலர் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
நாட்டில் வாழ்க்கைச் செலவினமும் விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகும் நிலையில் 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் என்பது இனியும் தொழிலாளர்களுக்குப் போதுமான சம்பள விகிதமாக அமையாது என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அரசாங்கம் வாழ்க்கைச் செலவினத்தைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 2,000 ரிங்கிட்டை தொழிலாளர்களுக்கு ஒரு புதிய சம்பள விகிதமாக வழங்க வேண்டும் என்றும் அருட்செல்வன் வலியுறுத்தி இருக்கிறார்.
மே தினத்தன்று நடைபெற்ற தொழிலாளர் தினப் பேரணியிலும் வாழ்க்கை சம்பள நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும் எனும் முழக்கம் எதிரொலித்திருக்கிறது.

2,102 ரிங்கிட்

இந்த நிலையில் யுனிசெப் எனப்படும் ஐநா சிறார்கள் நிதியகம் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச சம்பள முறை குறித்து ஒரு புதிய பரிந்துரையை அரசாங்கத்திடம் முன் வைத்திருக்கிறது. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளமாக 2,102 ரிங்கிட் வழங்கப்பட வேண்டும் என்று யுனிசெப் பரிந்துரைத்திருக்கிறது.
இந்தச் சம்பள விகிதம் அல்படுத்தப்பட்டால் இந்த நாட்டில் உள்ள மக்களின் சுமையை இது குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குக் குறைக்க முடியும் என்றும் பல்லேறு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
ஏற்கெனவே பேங்க் நெகாரா மலேசியாவும் குறைந்தபட்ச சம்பளமாக மாதம் 2,700 ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இப்போது கேள்வி என்னவெனில், தனியார்துறையின் முதலாளிகள் தரப்பு இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளதா என்பதாகும்.
ஒருவேளை இந்தப் புதிய சம்பள விகிதம் அறிமுகம் செய்யப்பட்டால் அது எத்தரப்பினருக்கு நன்மை அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இது தொழிலாளர் தரப்புக்கு நன்மை அளிக்குமா? அல்லது முதலாளிகள் தரப்புக்கு அதன்மூலம் நன்மை கிடைக்குமா என்பதுதான் கேள்வியாகும்.

பெரிய சவால்

கோலாலம்பூர் போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் மக்கள் வாழ்க்கைச் செலவின ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். வாழ்க்கைச் செலவினம் முன்புபோல் இல்லை. மார்கெட்டிற்கு ஒரு சில பொருட்களை வாங்குவதற்குச் சென்றாலும் குறைந்தபட்சம் 100 ரிங்கிட் கையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
ஆகவேதான் மக்களின் சுமையைக் குறைக்க முதல்கட்டமாக குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. ஆனால் ஒரு நிறுவனத்தின் வருமானம் அப்படியே இருந்தால் அல்லது சரிவு கண்டிருந்தால் அந்த நிறுவனத்தால் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
ஒரு நிறுவனத்தின் வருமானத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத சூழ்நிலையில் அவர்களால் மாதம் 2,000 ரிங்கிட்டிற்கு மேல் குறைந்தபட்ச சம்பளத்தைத் தங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடியுமா என்ற கேள்வியை முதலாளிகள் தரப்பு முன்வைக்கிறது.

சாமானிய மக்களின் நிலை

தற்போதைய சூழ்நிலையில் சாமானிய மக்கள் சில முக்கியமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதில் ஒன்று வாழ்க்கைச் செலவின உயர்வு. இன்னொன்று வறுமைக்கோட்டின் கீழ் பெறக்கூடிய வருமானம். போதுமான வருமானம் இல்லாததால் கடன் பிரச்சினை. இவை அனைத்தும் சாமானிய மக்களைத் தொடர்ந்து அழுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அப்துல் காலிட்.
நடப்பு குறைந்தபட்ச சம்பளம் மாதம் 1,500 ரிங்கிட்டாக இருக்கிறது. ஆனால் இனியும் இது போதாது என்பதுதான் தொழிற்சங்கத்தினரின் கருத்து. இதனை 2,102 ரிங்கிட் வரை உயர்த்தினால்தான் அது மக்களின் சுமையைக் குறைக்க முடியும் என்று அவர் கருத்துரைத்தார்.

 

காலம் கனிந்துவிட்டது

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பள விகிதத்தை மாதம் 2,102 ரிங்கிட் வரை உயர்த்துவதற்கு காலம் கனிந்துவிட்டது என்று எம்டியூசி எனப்படும் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைவர் முகமட் அபாண்டி அப்துல் கனி கூறியிருக்கிறார்.
1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் என்பது நிச்சயம் இனி போதாது. அந்த அளவுக்கு வாழ்க்கைச் செலவினங்கள் விண்ணை முட்டுகின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமானால் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதே சரியான வழியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆகவே அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளத்தை 2,102 ரிங்கிட்டாக உயர்த்தும் பரிந்துரையை நியாயமான முறையில் ஆய்வு செய்து அதனை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பது அவசியமாகும்.
இதனை எப்போது அமல்படுத்துவார்கள் என்பதைத்தான் தொழிலாளர் தரப்பு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. மலேசியத் தொழிலாளர்களுக்குப் பொருளாதார ரீதியாக ஒரு நியாயமான கவனிப்பு வழங்கப்பட வேண்டுமானால் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
குறைந்தபட்ச சம்பளத்தை 2,102 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் எனும் யுனிசெப் அமைப்பின் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பொருளாதார அமைச்சர்

ரஃபிஸி ரம்லி கூறியிருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.
வாழ்க்கைச் செலவினங்கள், மிகக்குறைந்த வருமானம், உற்பத்தித் திறன் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இன்னும் நியாயமான அளவிலான ஒரு சம்பள விகிதம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
சம்பள உயர்வு நீடிப்பதை உறுதிசெய்ய அரசாங்கமும் தலையிட வேண்டும் என்று எம்டியூசி வலியுறுத்தியது. சந்தைச் சக்திகள் அல்லது நிலவரங்கள் அடிப்படையை மட்டும் முழுமையாகச் சார்ந்திருக்காமல் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
கேவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு வாழ்க்கைச் செலவினம் யாரும் எதிர்பார்க்காத அளவு உயர்ந்துவிட்டது. குறைந்த வருமானம் பெறும் மக்கள் இதனால் தலைதூக்கும் பிரச்சினையைச் சந்திக்க வேண்டுமானால் சம்பள உயர்வே அதற்குச் சரியான வழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here