சென்னை:
அண்மைய சில நாள்களாக தமிழகத்தில் பரவலாகப் பெய்து வரும் கனமழைக்கு 24 பேர் பலியாகிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் விதமாக எட்டு மாவட்டங்களில், இரண்டே நாள்களில் 2.66 கோடி கைப்பேசி எண்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை காரணமாக 91 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 181 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் 143 கால்நடைகள் இறந்துவிட்டதாகவும், 13 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு 4,587 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த்துறை அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இவ்வாறு மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 90 நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு அவற்றின் கொள்ளளவில் பாதிக்கும் குறைவாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.