கோலாலம்பூர்:
திரெங்கானுவின் லாங் தெங்கா தீவில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்ததாகக் நம்பப்படும் ஒரு கேளிக்கை விருந்து தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து , குறித்த கேளிக்கை மையத்தின் உரிமையாளருக்கு நாளை வியாழக்கிழமை (மே 23) சம்மன் அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்குமாறு குறித்த ரிசார்ட்டிடம் கோரப்பட்டுள்ளதாக சுற்றுலா, கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக் கழகத்தின் பொறுப்பதிகாரி ரசாலி இட்ரிஸ் கூறினார்.
இது தொடர்பான நடவடிக்கையில் திரெங்கானு இஸ்லாமிய மத விவகாரத் துறை மற்றும் கோலத்திரெங்கானு நகர சபையும் ஈடுபடும் என்றும் அவர் சொன்னார்.
உலக அளவில் மலேசியன் கட்டுமானத் தொழிலுக்கான ஊக்கிவிப்பிற்காக குறித்த தீவில் இந்த கேளிக்கை விருந்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் பெண்கள் நீச்சலுடை போன்றதும் முற்றும் ஆபாசமாகவும் உடை அணிந்திருப்பதைக் காட்டும் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது.





















