விபத்தின்போது ஹெலிகாப்டர் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் பறக்கவில்லை- தேசிய கடற்படை அறிக்கை

கோலாலம்பூர்:

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மலேசிய அரச கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

தேசிய கடற்படையின் 90வது ஆண்டு விழாவுக்காக சாகசப் பயிற்சியில் ஈடுபட்டபோது, கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

அதில் ஒரு ஹெலிகாப்டர் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் பறக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவே விபத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

“விபத்துக்குள்ளான ஒரு ஹெலிகாப்டரில் (ஃபென்னேக் ஹெலிகாப்டர்) தரவுப் பதிவு பெட்டி இல்லை. எனவே, அதன் விமானியின் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்தது எனக் கூற முடியாது. எனவே, அந்த ஹெலிகாப்டர் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில், பயணப் பாதையில் பறக்காததே விபத்து நிகழ்வதற்கான காரணம் என்று விசாரணைக் குழு முடிவெடுத்துள்ளது,” என்று நேற்று (மே 30) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அரச மலேசிய கடற்படையின் தலைவர் அட்மிரல் அப்துல் ரஹ்மான் அயூப் தெரிவித்தார்.

விபத்துக்கு இயந்திரக் கோளாறு காரணமில்லை என்றார் அவர்

ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் அவற்றில் இருந்தோருக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு மாண்டதாக அட்மிரல் அப்துல் ரஹ்மான் கூறினார்.

மாண்டோரின் குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை தரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் மாதாந்திர ஓய்வூதிய வடிவில் வழங்குவதைத் தொடங்கிவிட்டதாக அட்மிரல் அப்துல் ரஹ்மான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here