மோடியை விளாசிய சு.சாமி.. “சொல்ல சொல்ல கேட்கல.. பாஜகவின் தோல்விக்கு காரணம் இதுதான்..” குமுறல்

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லும் இடங்களை அன்றே அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கணித்து கூறியிருந்தார். தற்போது அந்த கணிப்பு பலித்துள்ள நிலையில் பாஜகவின் சறுக்கலுக்கு என்ன காரணம்? என்பதை கூறி பிரதமர் மோடியை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் மத்தியில் ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 274 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவு என்பது வந்துள்ளது.

அதாவது ஆளும் பாஜக கூட்டணி 350 முதல் 400 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ‛இந்தியா’ கூட்டணி 150 இடங்கள் மட்டுமே வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்துள்ளது.

மாலை 7 மணி நிலவரப்படி பாஜக 239 தொகுதிகளில் முன்னிலையில் பெற்றது. இதில் 94 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால் பாஜகவின் என்டிஏ கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாறாக ‛இந்தியா’ கூட்டணி வேட்பாளர்கள் 235 லோக்சபா தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

‛இந்தியா’ கூட்டணியை பொறுத்தமட்டி்ல காங்கிரஸ் 99 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் 38 இடங்களில் ‛கை’ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதுதவிர பிற கூட்டணி கட்சிகளை சேர்த்து பார்த்தால் ‛இந்தியா’ கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இதனால் தற்போதைய சூழலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால் பாஜகவும், ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களும் எதிரெதிர் கூட்டணியில் இருந்து ஆட்களை இழுப்பதற்கான வேலைகளை தொடங்கி உள்ளனர். நாளைய தினம் டெல்லியில் ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தான் மத்தியில் புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரப்பட உள்ளது. இதனால் நாளைய மீட்டிங் மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது.

இந்நிலையில் தான் பெரும்பான்மையை பெற முடியாமல் பின்னடைவை பாஜக சந்தித்துள்ள நிலையில் பிரதமர் மோடியை அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாஜகவுக்கு 220 இடங்களில் தான் வெற்றி கிடைக்கும் என்று நான் கணித்தேன். இந்த கணிப்பு என்பது சரியாகி உள்ளது. பாஜக 237 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நான் சொன்ன ஆலோசனைகளை பாஜக பின்பற்றி இருந்தால் பாஜக 300 தொகுதிகளில் வென்று இருக்கலாம்.

ஆனால் துரதிஷ்டவசமாக மோடியின் சர்வாதிகார மனநிலை பாஜகவை படுக்குழிககுள் தள்ளிவிட்டது. இப்போதாவது அவர் தனது மனநிலையில் இருந்து வெளியேறி வர வேண்டும்’’ என்றார். தேர்தலுக்கு முன்பாக பல பேட்டிகளில் சுப்பிரமணியன் சுவாமி பாஜக 220 தொகுதிகளில் மட்டுமே வெல்லும். பாஜகவின் அலட்சியம், பிரதமர் மோடியின் தனிப்பட்ட செயல்பாடு, மூத்த தலைவர்களை ஓரம்கட்டுவது . உள்ளிட்டவற்றால் பாஜக இந்த முறை பெரும்பான்மையை பெற தவறலாம் என கூறியிருந்தார். அதன்படியே தற்போது ரிசல்ட் வெளியான நிலையில் பாஜக 237 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சிகளை சேர்த்தால் பாஜகவின் என்டிஏ கூட்டணி 293 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here