கோலாலம்பூர்:
போர்ட் கிள்ளான் கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சிங்கப்பூரரை போலிசார் வலைவீசித் தேடுகின்றனர்.
3.5 பில்லியன் ரிங்கிட் வரி ஏய்ப்பு வழக்குடன் அவர் தொடர்புடையவர் என்றும், அதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதே அவர்தான் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சந்தேகிக்கிறது.
தேடப்பட்டு வரும் சிங்கப்பூரரின் பெயரை அதிகாரிகள் இன்னமும் வெளியிடவில்லை.
அண்மையில் போர்ட் கிள்ளானில் கடத்தல் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
அவற்றுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களில் இந்த சிங்கப்பூரரும் ஒருவர் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.
அவரைத் தேடிப் பிடிக்க சிங்கப்பூர்க் காவல்துறையின் உதவி நாடப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“சிங்கப்பூர்க் காவல்துறைக்கும் மலேசியக் காவல்துறைக்கும் இடையே வலுவான உறவு, ஒத்துழைப்பு உள்ளது. எனவே, அந்தச் சந்தேக நபர் சிங்கப்பூரில் இருந்தால் அவரைத் தேடிக் கைது செய்ய சிங்கப்பூர் காவல்துறையின் உதவி நாடப்படும்,” என்று அஸாம் பாக்கி கூறினார்.
கடந்த கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாகக் கடத்தலில் ஈடுபட்டதற்காகவும் வரி ஏய்ப்பு செய்ய சரக்கு நிறுவனங்களுக்கு உதவியதற்காகவும் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்டோரில் நிறுவன இயக்குநரும் மூன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.