கோலாலம்பூர்:
மலேசியாவில் டீசல் மானியக் கொள்கை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டதால் மக்களிடையே கவலையும் அக்கறையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர், மாற்றியமைக்கப்பட்ட டீசல் மானியக் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளார்.
தீபகற்ப மலேசியாவில் இன்னமும் ஏறக்குறைய ஏழு பில்லியன் ரிங்கிட்டுக்கு டீசல் தொடர்பான மானியங்கள் வழங்கப்படுகின்றன என்று, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.
மேலும் “டீசலுக்கு வழங்கப்படும் மானியங்கள் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை,” என்றார் அவர்.
“டீசல் மானியங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதை டீசல் மானியக் கொள்கை உறுதி செய்கிறது. மேலும் மானியங்கள் வீணடிக்காமல் இருப்பது மானியக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும். அதிலிருந்து கிடைக்கும் சேமிப்புகள் பரந்த அளவுக்கு மக்களுக்குத் திரும்புவதை உறுதி செய்யும்.
“மக்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில் கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவத்து உள்ளிட்ட துறைகளுக்கு மிச்சமாகும் மானியம் பயன்படுத்தப்படும்,” என்று அன்வார் கூறினார்.
டீசல் கடத்தலைத் தடுக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 10ஆம் தேதியன்று மலேசிய அரசாங்கம், பல்வேறு டீசல் மானியங்களை மாற்றியமைத்தது. அது மட்டுமல்லாமல், சந்தை விலைக்கு ஏற்ப டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 55 விழுக்காடு அதிகரித்து லிட்டர் 3.35 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, மானியங்களால் பயனடையும் வணிக வாகனங்களின் உரிமையாளர்கள் விலையை உயர்த்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அன்வார் எச்சரித்திருந்தார்.
உதாரணமாக, பள்ளிப் பேருந்து சேவையை சுட்டிக்காட்டிய அவர், மானியத்தால் பயனடைந்தும் விலையை உயர்த்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.
இதுவரை பொருள் சேவை வரியை உயர்த்தியதற்காக பத்து நிறுவனங்கள் விளக்கம் அளிக்க உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அழைப்புக் கடிதத்தை அனுப்பியிருக்கிறது.
“அடையாளம் காணப்படும் நிறுவனங்களிடம் பொருள் சேவைகள் வரியை உயர்த்தியதற்காக விளக்கம் கேட்கப்படும்,” என்று ஜூன் 14ஆம் அறிக்கை வாயிலாக அமைச்சர் அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.
மூன்று போக்குவரத்து நிறுவனங்கள், மூன்று கட்டுமான நிறுவனங்கள், இரண்டு குளிர்பான நிறுவனங்கள், இயந்திரங்களை வாடகைக்கு விடும் இரண்டு நிறுவனங்கள் ஆகியன பத்து நிறுவனங்களாகும்.
ஆனால் சுற்றுலா பேருந்து சேவைகளுக்கு ஜூன் 10ஆம் தேதியிலிருந்து டீசல் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.