டெல்லியில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து துபாய் புறப்படவிருந்த விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை 9.35 மணிக்கு டெல்லி விமான நிலையத்திற்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அங்கிருந்து துபாய் புறப்படவிருக்கும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. அதையடுத்து விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனையில் சந்தேகப்படும்படி எதுவும் கிட்டவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.

அந்த மின்னஞ்சல் டெல்லி அனைத்துலக விமான நிலையத்தின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேவையான அனைத்துச் சோதனைகளும் நடத்தப்பட்டு விட்டன. சந்தேகத்திற்குரிய வகையில் எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை என்று டெல்லி உதவி ஆணையாளர் உஷா ரங்கனானி தெரிவித்தார்.

அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது. மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி குறித்து காவல்துறை ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக, பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் என மக்கள் கூடும் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்படுகிறது.

கடந்த ஜூன் 12ஆம் தேதி, டெல்லியில் சில அருங்காட்சியகங்கள், சுகாதார நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றுக்கு ‘ஆடம் லன்ஸா’ என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்திருந்தது. மே 28ஆம் தேதி வாரணாசிக்குச் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்ல நேரிட்டது.

மே 1ஆம் தேதி, டெல்லியில் உள்ள 150க்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. மேற்கண்ட அனைத்து மிரட்டல்களையும் விடுத்தவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுத்துறை ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here