19 பேருடன் பள்ளத்தில் பாய்ந்த விரைவுப் பேருந்து; 4 பேர் காயம்

லஹாட் டத்து:

நேற்றிரவு பத்து 9 ஜாலான் சீலம் என்ற இடத்தில் விரைவுப் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் தடம்புரண்டதில் 19 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், ஆனாலும் அவர்களில் நான்கு பேர் லேசான காயமடைந்து இங்குள்ள லஹாட் டத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

16 பயணிகள், இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பேருந்து நடத்துனர் அடங்கிய 19 நபர்கள், செம்பூர்ணாவில் இருந்து கோத்தா கினாபாலுவிற்கு பயணித்ததாக லஹாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் டத்து சும்சோவா ரஷித் தெரிவித்தார்.

“திடீரென பேருந்து 50 மீட்டர் பள்ளத்தில் தடம்புரண்டது, பேருந்தில் இருந்த சிலர் தாங்களாகவே பேருந்திலிருந்து வெளியேறினர்.

“காயமடைந்த நான்கு நபர்கள் இப்போது லஹாட் டத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும்” அவர் சொன்னார்.

நேற்றிரவு 9.24 மணியளவில் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் 20 உறுப்பினர்கள் மற்றும் சீலம் தன்னார்வ தீயணைப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here