கோலாலம்பூர்:
சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏதேனும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்தால், அதுகுறித்து பொதுமக்கள் தகவல் மற்றும் புகார்களை பதிவு செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) இரண்டு செயல்பாட்டு அறைகளை திறந்துள்ளது.
பினாங்கு MACC தலைமையகம் மற்றும் MACC செபெராங் பிறை கிளையின் அலுவலகத்தில் செயல்பாட்டு அறைகள் இருப்பதாக MACC இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

இந்த செயல்பாட்டு அறைகள் ஜூலை 6 வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும், பொதுமக்கள் ஏதேனும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04-2299262 நீட்டிப்பு 1107 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 மற்றும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 ஆகியவற்றின் கீழ் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் MACC நினைவூட்டுகிறது என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























