துபாய்: ஹஜ் பயணத்திற்காக மெக்கா சென்ற 98 இந்தியர்கள் இவ்வாண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு 1.75 லட்சம் இந்தியர்கள் புனித பயணம் மேற்கொண்டபோதிலும், இந்த மரண சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனைத்து மரணங்களும் வானிலை சார்ந்த இயற்கையான காரணங்களால் ஏற்பட்டவை.
கடுமையான வெப்பம் மற்றும் அதனால் உடலில் ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக மரணங்கள் நிகழ்ந்ததாக தெரிகிறது. பெங்களூரைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கவுசர் ருக்சானா (69) மற்றும் அப்துல் அன்சாரி (54) மரணமடைந்ததாக அடையாளம் காணப்பட்ட நிலையில் கர்நாடக மாநில ஹஜ் கமிட்டி நிர்வாக அதிகாரி எஸ் சர்பராஸ் கான், மெக்காவிற்கு அருகிலுள்ள மினா பள்ளத்தாக்கில் ராமி அல்-ஜமாரத் சடங்கின் போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சடங்கு நெரிசல் காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன இருப்பினும் சவுதி அரேபியா கூடுதலாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவின் மெக்காவில் இந்த புனித யாத்திரை சீசனில் 1000க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். இப்பகுதி கோடையில் மட்டுமல்ல, குளிர்கால மாதங்களிலும் கடுமையான வெப்பத்தை கொண்டுள்ளது. இதற்கு மெக்காவின் புவியியல் அமைப்பே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏழு மலைகளால் சூழப்பட்ட மெக்கா, கடல் மட்டத்திலிருந்து வெறும் 909 அடி உயரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு பகுதியாகும்.
சுற்றியுள்ள மலைகள் வடக்கிலிருந்து குளிர்ந்த காற்றை வரவிடாமல் தடுக்கின்றன, இதனால் வெப்ப அலை வெளியேறுவதில்லை. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் உள்ள மக்காவின் குறைந்தபட்ச உயரம், அதன் வெப்பத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த ஆண்டு, உயிரிழந்த ஹஜ் யாத்ரீகர்களில் பெரும்பாலானோர் எகிப்தை சேர்ந்தவர்கள். எகிப்து, ஜோர்டான், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள முடியவில்லை. ஜோர்டானின் பெரும் பகுதிகளில் கோடையிலேயே வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும். மெக்காவிலுள்ள 50 டிகிரி வெயிலை அவர்களால் தாங்க முடியவில்லை.
இறந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள். 60 பேர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர். எகிப்தைச் சேர்ந்தவர்களின் மரணங்கள் அனைத்தும் வெப்பத்தால் ஏற்பட்டவை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தோனேசியா, ஈரான், செனகல் மற்றும் துனிசியா போன்ற பிற நாடுகளும் இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளன.
மெக்காவின் கடுமையான காலநிலை உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்களுக்கு தொடர்ந்து சவால்களை ஏற்படுத்துகிறது. யாத்ரீகர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்தாலும், தண்ணீர் தெளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும், கூட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டேதான் உள்ளன.



















