புதுடெல்லி: சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் இந்தியத் தாதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் மேகாலய மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது கெரலின் மராக்கும் ஒருவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கெரலினின் தந்தை காலமானார். அதையடுத்து, அவரது குடும்பத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. சிங்கப்பூரில் வேலை செய்வதன் மூலம் குடும்பத்தின் நிலை மேம்படும் என்கிறார் கெரலின். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவற்றில் சேரவும் மேகாலயா மாநில அரசு 2023ஆம் ஆண்டில் அங்குள்ள தாதியருக்கென்றே சிறப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியது.
அதில் கெரலினைப் போலவே பல தாதியர் கலந்துகொண்டனர். இந்தியத் தாதியரைப் பணியமர்த்த பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவற்றில் சிங்கப்பூர், ஜப்பான், பிரிட்டன் உட்பட பல நாடுகள் அடங்கும். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கெரலின் சிங்கப்பூரில் பணிபுரிய முடிவெடுத்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் தாதியர் வாரிய உரிமத் தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். சிங்கப்பூரில் உள்ள தாதிமை இல்லம் ஒன்றில் பணிபுரிய அவருக்கு இடம் கிடைத்துள்ளது. வாரியத்தில் தமது பெயரைப் பதிவு செய்துகொள்ள அவர் காத்திருக்கிறார். அதன் பிறகு, வேலை அனுமதி அட்டைக்காக அவர் விண்ணப்பம் செய்வார் என்று ஆள்சேர்ப்பு முகவையான அஜீத் என்டர்பிரைசஸ் கூறியது.
“சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவர். எனவே, புதிதாக இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளத் தேவையில்லை,” என்று கெரலின் தெரிவித்தார். தற்போது அவர் மேகாலயாவில் பெறும் சம்பளத்தைவிட சிங்கப்பூரில் அவருக்கு வழங்கப்படும் சம்பளம் ஏழு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மெகாலயா மாநிலத்தில் நடைபெற்ற ஆள்சேர்ப்பு நிகழ்வில் சிங்கப்பூரில் பணிபுரிய 13 தாதியர் பணியமர்த்தப்பட்டனர். வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்பும் இந்தியத் தாதியர்கள் பலர் சிங்கப்பூரைத் தேர்வு செய்வதாக அம்மாநிலத்தின் திறன் மேம்பாட்டு மன்ற நிர்வாக இயக்குநர் திரு எஸ். ராம்குமார் கூறினார். நிகழ்வில் கலந்துகொண்ட தாதியரில் 27 பேரை ஜப்பான் பணியமர்த்தியுள்ளது.