ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ,நூதன ஸ்ரீ மீனாட்சி உடனாகிய ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயம் மகா கும்பாபிஷேகம் அனைவரும் திரண்டு வாரீர்

மலாக்கா,

தன்னை நாடும் பக்தர்கள் நலன் பல பெற்று வாழ புக்கிட் புருவாங் குடியிருப்பு  பகுதியின்  நடுவே மக்களை காக்கும் காவல் தெய்வமாய் கோயில் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை முத்து மாரியம்பிகை.

108 ஆண்டுகள் தொன்மையான இவ்வாலயம்  மீண்டும் 1.3 மில்லியன் வெள்ளி செலவில் மறுசீரமைக்கப்பட்டு புதுப் பொழிவுடன் காட்சியளிக்கிறது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ,நூதன ஸ்ரீ மீனாட்சி உடனாகிய ஸ்ரீ சுந்தரேஸ்வர் ஆலய ஜீர் ணோத்தாரன புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 4.5.2025 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.10 முதல் 9.40 மணிக்குள் விமரிசையாக நடைபெறவுள்ளது . 

ஆயேர்குரோ- புக்கிட் புருவாங் சமிஞ்சை விளக்கு முக்கோண நிலத்தில்  75 ஆண்டுகளுக்கு மேல்  சிறு ஆலயமாக இருந்த இக்கோவில் 1992 ஆம் ஆண்டு   நகர் புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக  தாமான் புக்கிட் புருவாங் குடியிருப்பில் இட மாற்றம் கண்டு புதிய ஆலயம் இங்கு நிர்மாணிக்கப்பட்டது.

இவ்வாலயம் தற்பொழுது ஆலயத் தலைவர் வி.சசிதரன் தலைமைத்துவத்தின் கீழ் மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. ஆலயத்தின் முன்னாள் தலைமை குருக்கள் நினைவில் வாழும் சிவ ஸ்ரீ பாஸ்கரன் குருக்குள் அவர்களின் ஆசியிலும், ஆலய தலைமைக் குருக்கள் சிவ ஸ்ரீ தனன் குருக்களின் ஆதரவிலும் சிறந்த அரவணைப்பிலும் நிர்வாக உறுப்பினர்களின் ஒத்துழைப்பிலும்  இவ்வாலயத்தின்  புதிய  சீரமைப்பு பணிகள், கூடுதல் அழகுபடுத்தும் வேலைகள் தமிழ் நாடு , நல்லாடையைச் சேர்ந்த ஸ்தபதி இரா.பக்கிரிசாமி அவர்களால்  மிக அழகிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முத்து மாரியம்மன் உற்வ  மூர்த்தியாக இங்கு அருள் காட்சி தருகிறார். இங்குள்ள சிவன் ஆலயம் இம்முறை விஸ்தாரமான வகையில் பக்தர்களின் வசதிக்காக கட்டுப்பட்டுள்ளது. 1008 சிவ அலங்கார சிற்பங்கள் மிக அழகாக  வடிவமைக்கப்பட்டுள்ளது சிவன் சன்னிதானம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலய கோபுரச் சாயலைக் கொண்டுக் கட்டப்பட்டுள்ளது இங்கு தனி சிறப்பாக விளங்குகிறது மேலும் சிவபுராணத்தின் வரும் வாசகங்களான புல்லாகி, பூடாகி மரமாகி, எனும் வரிகள் ,

புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே! இனி மனித பிறப்பு வேண்டாம்  ஈசனே எனும் வாசகங்கள் இங்கு அழகிய சிற்ப வடிவில் அமைக்கப்பட்டு அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.  நான்கு  நாயன்மார்களின் திருவுருவ சிலைகள் இங்கு அழகாக காட்சியளிக்கிது.

முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள்  புதிய அலங்கார மண்டபம், அமைக்கப்பட்டுள்ளது . மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில்  அஷ்ட மாரியம்பிகை சிலை கட்டுப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவறை வாசல்கள், கருவறை பீடங்கள்  சிம்ம பலிபீடம்  கொடி மர பீடம் கருங்கல் சிலையில் அமைக்கப்பட்டுள்ளது.  கொடி மரம், மற்றும் கோபுரங்களின் கலசங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.

புதிதாக லட்சுமி, சரஸ்வதி கருங்கல் சிலைகள் புகுத்துப்பட்டதுடன் காவல் தெய்வமாக காத்தவராயன் வெண்கல சிலையில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .

ஆலய மண்டபம் டாக்டர் சு. துரைசாமி செட்டியார் திருமண மண்டபம், மற்றும் கீழ் தளத்தில் உள்ள ராயப்பன் செட்டியார் பொது மண்டபம்  மீண்டும் அழகாக பழுது பார்க்கப்பட்டு  கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது .

ஆலய கும்பாபிஷேக தலைமை குருவாக தமிழ் நாடு , அரிமளம் , சிவ ஸ்ரீ எஸ் ரவி குருக்கள் தலைமையில்  யாக சாலையில்  27  குண்டங்களில் ஹோமங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது  70 மேற்பட்ட குருமார்களால் வேத பாரயணம் ஓத மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற  அனைத்து பணிகள் சீராக செய்யப்பட்டுள்ளது .

 பக்தர்களின் வசதிக்காக எம்.எம்.யு  பல்கலைக்கழக கார்  நிறுத்தும் இடம் ,மற்றும் அருகில் உள்ள  புக்கிட் புருவாங் மைதானத்திலிருந்து வாகன வசதிகளை ஆலய நிர்வாகம் ஏற்பாடுச் செய்துள்ளது.

மகா கும்பாபிஷேகத்தின் அனைவரும் திரளாக வந்து முத்து மாரியம்மனின் அருள் ஆசி பெற்றுச் செல்வதுடன் 48  நாட்கள் நடைபெறவுள்ள மண்டாலபிஷேக உபயத்தில் சேர விரும்புவர்கள் ஆலய நிர்வாகத்தை தொடர்புக் கொள்ளலாம் என  ஆலயச்  செயலாளர் த. செல்வநந்தன்   அன்புடன்  கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here