அலோர் ஸ்டார்:
கூலிமில் உள்ள கம்போங் பாடாங் உபியில் குரங்குக்காக வைக்கப்பட்ட எலி விஷம் கலந்த கெரோப்போக் (keropok) சாப்பிட்டதாக நம்பப்படும் இரண்டு மற்றும் மூன்று வயதிலான இரு சகோதரர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
“குரங்குகளை பொறிவைத்துப் பிடிக்க தோட்டக்காரர் தோட்ட வேலியில் தொங்கவிட்ட எலி விஷம் கலந்த கொரோப்போக் நொறுக்கு தீனியை அவர்கள் சாப்பிட்டதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய், நேற்றுக்காலை 11 மணியளவில் தனது பிள்ளைகள் வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளத் தொடங்கியபோதே, அச்சம்பவம் குறித்து அறிந்தார் என்று கூலிம் மாவட்ட காவல்துறை தலைவர் முகமட் அஸிஸுல் முகமட் கைரி கூறினார்.
அந்தத் தாய் அவர்களை மருத்துவ கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். “அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதைக் கண்டறிந்த பின்னர், இரவு 7.30 மணியளவில், பாதிக்கப்பட்ட இருவரையும் மேல் சிகிச்சைக்காக பினாங்கு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,” என்று அவர் இன்று (ஜூலை 8) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“சிறார்கள் மீது அலட்சியத்துடன் நடந்துக்கொண்டதாக 2001 குழந்தைகள் சட்டம் 2001 (சட்டம் 611) பிரிவு 31(1) மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 284 இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.