ரவூப், ஜூலை 22-
உயர்நெறி மிகுந்த திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கக் கோட்பாடுகளை தாங்கிப் பிடித்து வருகின்ற ரவூப் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தனது முன்னாள் மாணவர்களுடனான நட்புறவை பேணி காப்பதில் சிறந்த உதாரணப் பள்ளியாகப் பார்க்கப்படுகின்றது.
1970ஆம் ஆண்டு மாணவர்களின் தொடர்பையும் வலுப்படுத்தி, அதற்கடுத்து 80, 90, 2000ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்களின் உறவையும் புதுப்பித்து, எல்லா நிலைகளிலும் பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கும் மிகப் பெரிய முன்னாள் மாணவர் சக்தியை சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது.

பள்ளியின் பெருமை காத்து, பள்ளி வளர்ச்சிக்கு எல்லா நிலைகளிலும் துணை நிற்கும் முன்னாள் மாணவர்களின் கரிசனத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை “அர்ப்பணிப்புக்கு ஓர் ஆராதனையும் முன்னாள் மாணவர்களின் சங்கமமும்” என்கிற நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. வருகையாளரின் மனதையும் வருடிச் சென்றது.
ஆசிரியர் சரவணன் இராமச்சந்திரன் வரிகளில் உருவான “பிறந்த மண்ணின் பெருமை காத்து” எனும் பள்ளிப் பாடலும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் கண்டது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான அரச மலேசிய போலீஸ் படையின் ஜோகூர் மாநில குற்றப்புலனாய்வு இலாகாவை சேர்ந்த டி.எஸ்.பி. வே.இராஜகோபால் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, பள்ளிப் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய அவர், பள்ளியின் அபார வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைவதாகவும், மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருகின்ற தலைமையாசிரியர் இல.கருணாநிதி, அவர்தம் ஆசிரியர் பெருமக்களையும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
“1330 திருக்குறளை தமிழ்ப்பள்ளிகளில் மட்டும்தான் பயில முடியும். தவிர, வேறு எந்த மொழிப் பள்ளியிலும் கேட்கக்கூட முடியாது. நம் மொழி, கலை, கலாச்சாரம் பேணிவருகின்ற தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்கும் கடப்பாடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.
சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியால்தான் நான் இன்று உயர்ந்துள்ளேன். ஆதலால், நான் எந்த மேடையிலும் சொல்வேன், தமிழ்ப்பள்ளிதான் நமது தேர்வு!” என்று டி.எஸ்.பி. இராஜகோபால் உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.

இதற்கிடையில், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர், சமுதாயத் தலைவர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் என பல நல்லுள்ளங்கள் இணைந்து தமிழ்த்தொண்டு ஆற்றிவருவதால் தற்போதைய சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக தலைமையாசிரியர் இல.கருணாநிதி நன்றி பகன்றார்.
முன்னாள் மாணவர்களின் சக்தியானது இப்பள்ளிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும், அவர்களை இன்று மேடையேற்றி சிறப்பித்தது”அவர்களின் அற்பணிக்கு ஓர் ஆராதனை” செய்ததில் தாமும் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெருமிதம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகமான முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.

முன்னாள் மாணவி க.அமுதவள்ளி குடும்பத்தினர், சு.சக்ரவர்த்தி, 1983 – 1988ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து மூன்று வகுப்பறைகளுக்கும் ஆறாயிரம் ரிங்கிட் மதிப்பிலான மூன்று விவேக தொலைகாட்சிகளை வாங்கித் தருவதற்கு முன்வந்துள்ளதும் போற்றத்தக்கது என்று அவர் மனம் நெகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் சார்பில், குறிப்பிட்ட சிலர் தங்களின் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தொழில் காரணமாக வெவ்வேறு ஊர்களில் வசித்தாலும், சீரோ தோட்டத்து மண் வாசனையை மறக்க முடியாது என்று, எல்லா நிலைகளிலும் பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்போம் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் சந்திரன், விஜியன், மஇகா ரவுப் தொகுதித் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன், பிகேஆர் கவுன்சிலர் டி.மகேந்திரன் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோரும் சுற்றுவட்டாரத் தலைவர்களும் பள்ளிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம் என அறுதியிட்டுக் கூறியதாக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முகநாதன் தெரிவித்தார்.




















