டில்லிராணி முத்து
தெலுக் இந்தான், ஜூலை 22-
ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி என்ற எந்தவொரு வேறுபாடும் பாகுபாடும் இன்றி நாம் அனைவரும் இந்தியர்களாக ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தால் அனைத்து சிக்கல்களையும் பிரச்சினைகளையும் கண்டிப்பாக எதிர்கொள்ளவும் முறியடிக்கவும் முடியும் என ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி கூறினார்.
கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணி தொடங்கி தெலுக் இந்தான் லோவர் பேராக் கிளப்பில் நடைபெற்ற ம.இ.கா. பாகான் டத்தோ தொகுதி தலைவர் டத்தோ இரா.சுப்ரமணியம் மஇகா மத்திய செயலவை உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
ஒற்றுமையானது நம்மிடையிலான நல்லிணக்கம், அன்பு, சொந்தம் என்ற உணர்வுகளை பலப்படுத்துகிறது.
இந்நிலையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கூட நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் வெல்ல முடியும்.

ஒரு சூழ்நிலையை தனியாக கையாள்வது பெரும்பாலும் தோல்வியில் தான் முடியும். மேலும் ஆபத்து, தீங்கை எதிர்கொள்ள நேரிடும். அதுமட்டுமின்றி ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதும் கடினமாகிவிடும்.
கட்சி ரீதியில் நாம் அனைவரும் வேறுபட்டாலும் ஒரு குழுவாக அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தால் வலிமை பேறுவோம். கடினமான சூழ்நிலையிலும் வெற்றி பெறும் வலிமை உண்டாகிறது என்பதை வசந்தி சுட்டிக்காட்டினார்.
தனி மரம் எப்போதும் தோப்பாகாது. அதுபோல நாம் தனித்திருந்தால் என்றும் வெற்றி கிட்டாது. ஒற்றுமையாக இருந்தால் மட்டும்தான் உயர்வினை அடைய முடியும். எனவே இத்தொகுதி வாழ் இந்தியர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நாம் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும்
அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக உரையாற்றிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியின் இந்திய சமூகநலன் சிறப்பு அதிகாரியும் ம.இ.கா. பாகான் டத்தோ தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவருமான அர்விந்த் அப்பளசாமி மிக முக்கியமாக இந்நாட்டில் நம் இனத்தை இழிவாகவும், கேவலமாகவும் பேசும் சில தரப்பினருக்கு நாம் சரியான பதிலடி கொடுக்கும் வேண்டும் என்றால் முதலில் நம்மிடையே பிளவு இருக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

யாரும் நம் இந்திய சமுதாயத்தை இழிவாகப் பேசுவதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. ஒற்றுமையே பலம் என்பதை ஆக்கப்பூர்வமாக உணர்ந்து அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டால் எவருக்கும் நம் இந்தியர்களை இழிவாக பேசுவதற்கு தைரியம் இருக்காது என்றார் அவர்.
மேலும் அனைவரும் “நாங்கள் இந்தியர்கள்” என்ற கர்வத்தோடு ஒன்றிணைந்தால் உலகமய தாக்கத்தை எதிர்கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு வித்திட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மஇகா உயர் பதவிக்கான தேர்தலில் பாகான் டத்தோ தொகுதி தலைவராகவும் மத்திய செயலவை உறுப்பினராகவும் வெற்றி பெற்ற டத்தோ சுப்ரமணியத்திற்கு அவர்தம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டு மலர் மாலை அணிவித்து அர்விந்த் கெளரவித்தார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய இந்நிகழ்ச்சியின் நாயகன் டத்தோ சுப்ரமணியம், தம் மீது நம்பிக்கை வைத்து தமக்கு வாக்களித்தவர்களுக்கும், தமக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தவர்களுக்கும் நன்றியை பதிவு செய்துக் கொண்டார்.

மேலும் பாகான் டத்தோ தொகுதி தலைவர் என்ற முறையில் இந்த தொகுதியில் வாழும் இந்திய சமுதாயத்தினர் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குவதற்கு தொடர்ந்து சிறந்த முறையில் சேவையாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்நாட்டில் நம் இந்திய சமுதாயத்திற்கு பிரச்சினை என்றால் குரல் கொடுக்கும் ஒரே கட்சியாக ம.இ.கா. இருக்கிறது. எனவே இந்தியர்கள் அனைவரும் பழையபடி ம.இ.கா.வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் டத்தோ சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அர்விந்த் அப்பளசாமி உட்பட தெலுக் இந்தான், பாகான் டத்தோ தொகுதி கிளைத் தலைவர்கள் பலரும் டத்தோ சுப்ரமணியத்திற்கும், அவரின் துணைவியார் டத்தின் சு.குணசுந்தரிக்கும் மாலை, பொன்னாடை அணிவித்து தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.




















