வெளிநாட்டவர்க்கு மானிய விலையில் எரிபொருள் விநியோகித்த எரிபொருள் நிலைய நடத்துனருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் அபராதம்

நிபோங் திபால்:

மலேசியாவின் சுங்கை பாக்காப்பில் வெளிநாட்டவர் ஒருவருக்கு மானிய விலை எரிபொருள் விநியோகித்த பெட்ரோல் நிலைய நடத்துனருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) பிற்பகல் 2.24 மணிக்கு வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட வாகனத்திற்கு மானியத்துடன் கூடிய எரிபொருளை நிரப்பியதாகக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளிமூலம் தெரியவந்துள்ளது என்று பினாங்கு உள்ளூர் வணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் இயக்குநர் எஸ். ஜெகன் கூறினார்.

“அண்டை நாட்டுப் பதிவெண் கொண்ட ஒரு வாகனத்திற்கு மானியத்துடன் கூடிய RON95 எரிபொருளை நிரப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்று ஓர் அறிக்கை மூலமாக ஜெகன் தெரிவித்துள்ளார்.

மானிய எரிபொருளை வெளிநாட்டினர்க்கு விற்பதைத் தடுக்கும் நோக்கில், எல்லா பெட்ரோல் நிலையங்களிலும், குறிப்பாக மாநில எல்லைப் பகுதிகளிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பை அமைச்சு தீவிரப்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

விதிமீறுவோர்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிக்கு ஒரு மில்லியன் ரிங்கிட்வரை அபராதமும் மூன்றாண்டுகள் வரைச் சிறையும் விதிக்கப்படும். விதிமீறும் நிறுவனங்களுக்கு இரண்டு மில்லியன் ரிங்கிட்வரை அபராதம் விதிக்கப்படும்,” என்று ஜெகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here