சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் அடங்குவர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக விளங்கும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடியும் காவல்துறையினரிடம் அவர் சிக்காமல் தப்பித்து வருகிறார். அது பற்றிய சில அதிர்ச்சி தரும் தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகள் அவருடன் பேசுவதற்காக தனிப்பட் முறையில் கைப்பேசிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் கூட்டாளிகளின் தனிப்பட்ட கைப்பேசிகள் மூலம் தொடர்பு கொள்வதாகவும் கூறப்படுகிறது. பின்னர், அவர்களின் சொந்த கைப்பேசிகள் மூலம் விரும்பும் நபருடன் தொடர்புகொண்டு ஒலிபெருக்கியுடன் பேசுவது தெரியவந்துள்ளது.
இவ்வாறு பேசினால் சம்போ செந்தில் யாருடன் பேசுகிறார் என்ற விவரங்களை பெற இயலாது என்று காவல்துறையினர் கூறுகின்றனர். வி.பி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே தனது கூட்டாளிகளுடன் சம்போ செந்தில் பேசி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.





















