வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அது தொடர்பான ஆவணங்களில் அவர் தற்பொழுது கையெழுத்திட்டுள்ளார். அப்பொழுது பேசிய திருவாட்டி ஹாரிஸ், தமது மக்கள் சார்ந்த பிரசாரம் அதிபர் தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் என்று கூறினார்.
இந்நிலையில், இவ்வாரத் தொடக்கத்தில் தமது வெள்ளை மாளிகை அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், திருவாட்டி கமலா ஹாரிஸ் சிறந்த துணை அதிபர் என்று கூறி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.
“அவர் அனுபவமிக்கவர், திடமானவர், திறமையானவர். இனி அவரைத் தேர்ந்தெடுப்பது அமெரிக்க மக்களான உங்கள் கைகளில் உள்ளது,” என்று திரு பைடன் புகழாரம் சூட்டினார்.
மற்றொரு பக்கம், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட துணை அதிபர் கமலா ஹாரிசைவிட தகுதியானவர் இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேரின் ஜோன் பியார் சொன்னார்.



















