மகாராஷ்டிர மாநிலத்தில் நான்கு மாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் உள்ள நவிமும்பையில் சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்த 13 குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும், கட்டட இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கியிருப்பது தெரியவந்தது. மூவர் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுடைய செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட நிலையில், அவர்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.
விபத்துக்குள்ளான கட்டடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என நவிமும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஷ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.



















