(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
டத்தோ டாக்டர் முகமது புவாட் சர்காஷி வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில், ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டமை அரண்மனை தரப்பின் “உத்தரவின்” பேரில் நடைபெற்றதாகவும், ஜோகூர் அம்னோ அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இது தொடர்பாக இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஜோகூர் மாநில ம.இ.கா. தலைவரான ரவீன் குமார் கிருஷ்ணசாமி இதனைத் தெரிவித்தார்.
டத்தோ டாக்டர் முகமது புவாட் சர்காஷி முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், அவற்றை ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காஸி ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெளிவாக மறுத்துள்ளதாக அவர் கூறினார்.
ஜோகூர் மாநில அரசியலமைப்புச் சட்டம் 1895-இன் இரண்டாம் பகுதி, 23-ஆவது பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவே மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மந்திரி பெசார் விளக்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மந்திரி பெசார் முதலில் ஜோகூர் மாநிலத்தின் செயல்பாட்டு சுல்தானாகப் பொறுப்பேற்றிருக்கும் டிஒய்ஏஎம் துங்கு மகுடா இஸ்மாயிலை நேரில் சந்தித்து விவரங்களை சமர்ப்பித்த பின்னரே அரச அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த அரச அனுமதி மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டாய நடைமுறையாகும்; அது எந்த வகையிலும் அரசியல் உத்தரவு அல்லது அரசியல் தலையீடாக கருதப்பட முடியாது என்றும் ரவீன் குமார் வலியுறுத்தினார்.
எனவே, ஜோகூர் அரச குடும்பம் அம்னோவின் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுகிறது அல்லது மாநில சட்டமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் டத்தோ டாக்டர் முகமது புவாட் சர்காஷி வெளியிட்ட கருத்துகள் மிகவும் கடுமையானவை என்றும், அவை பொதுமக்களை தவறாக வழிநடத்துவதோடு ஜோகூர் அரசியலமைப்பு மன்னராட்சி அமைப்பின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கக்கூடியவை என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மலேசிய அரச காவல்துறை விசாரணைக் கோப்பை ஏற்கனவே பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. உண்மை நிலையை முழுமையாக ஆராய்ந்து, சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.






















