தேசிய அளவில் சமய இசை நிகழ்ச்சி – தங்க கணேசன்

கலை-இசைத் துறையைச் சேர்ந்தவர்களின் ஈடுபாட்டுடன் தேசிய அளவில் சமய இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் கலைத் துறையில், குறிப்பாக இசைத் துறையில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். கலை-இசைக் குழுவினர் மற்றும் நுண்கலைப் பள்ளிகள் மூலம் சிறார் முதல் பெரியோர்வரை ஆயிரக் கணக்கானோர் தங்களின் கலை ஆர்வத்தையும் பாட்டுத் திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பாடுகின்றவர்களின் இசை வெளிப்பாடாக பெரும்பாலும் திரைப்பட பாடல்கள்தான் இடம்பெறுகின்றன.

இதில், சமயம் சார்ந்த இறைநேசப் பாடல்களையும் ஆன்மிக நன்னெறிசார் பாடல்களையும் இணைத்துக் கொண்டால், அது சமூகத்தில் குறிப்பாக இந்து மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்; தவிர வளரும் இளைய தலைமுறையினரிடையே பக்தி சிந்தனையை மேலோங்கவும் செய்யும் என்று ஷா ஆலம், கோத்தா கெமுனிங் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தங்க கணேசன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

கிள்ளான், பண்டார் புத்ரியில் இயங்கும் அருள் நுண்கலைப் பள்ளி முதல்வர் ‘சங்கபூசன்’ அல்லிமலர் மனோகரன் தலைமையில் 60 மாணவர்கள் ஒன்றிணைந்து உலகப் புகழ்பெற்ற அம்மன் பாடல்களைப் பாடினர். ‘கற்பூர நாயகியே’ என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு பிரமுகராக கலந்துகொண்ட ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன், “நாட்டில் உள்ள அனைத்து நுண்கலைப் பள்ளிகளையும் இசைக் குழுவினரையும் ஒருங்கிணைத்து, தேசிய அளவிலான பக்தி இசை நிகழ்ச்சிக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று மேலும் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here